விலையில்லா விளம்பரத் தூதர்கள்!

பிஜேபியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் காங்கிரஸ் செய்த ஊழல்களுக்குச் சப்பைக்கட்டுக் கட்டும் பரிதாப நிலை. பிஜேபியைத் தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்ற பெயரிலும், தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் திமுகவுக்குச் சப்பைக்கட்டுக் கட்டும் படுபரிதாப நிலை. ஒட்டுமொத்தமாக நாட்டில் பிஜேபியை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த விளம்பரத்தூதர்களே இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் . இவர்களின் இந்தத் தடு(ட)மாற்றமே பிஜேபியின் பலம்.

விஞ்ஞானச் சோசலிசம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகுத்தறிவு என்ற பெயரில் இனவெறி, மொழிவெறி, சாதிவெறி, மறைமுகமதவெறி, சுயவெறுப்பு ஆகியவற்றைத் தூண்டி போலிகளையே உண்டாக்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளே இறுதியில் போலியாகிப் போனதுதான் முரண்நகை.ராகுலைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மழையைக் கண்டு எக்காளமடும் தவளைகளாகக் குற்றமுள்ள சில்லரை எதிர்க்கட்சிகளும், எப்போதும் எதிர்த்தரப்பில் உள்ள இந்த விளம்பரத் தூதர்களும் கிடைக்க மோதியின் பிஜேபி கொடுத்து வைத்திருக்க வேண்டும். கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிஜேபிக்கு எதிரி என்று சொல்லக்கூட எவருக்கும் தகுதியில்லை.

கிட்டத்தட்ட எதிரிகளற்ற இந்தச் சர்வாதிகார நிலையை ஆளும் தரப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்தது இந்த விலையில்லா விளம்பரத் தூதர்களே என்றால் அது மிகையல்ல.

இவர்களின் இந்த ஆழ்துயிலே சர்வாதிகாரப்பொன்னுலகக் கனவின் மீளாத்துயிலாகட்டும். மானுடப் பொன்னுலகம் யார் மூலம் வந்தாலென்ன?

ஆவரண – திரை

போலி முற்போக்குவாதத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது எஸ்.எல்.பைரப்பாவின் “ஆவரண – திரை” என்ற நாவல். வரலாற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பாலபாடத்தை இந்நாவலில் நாம் காணலாம். வரலாற்றை உள்ளபடியே ஆதாரத்துடன் நிறுவுகிறது. நாவலில் சொல்லப்பட்டுள்ள வரலாற்றையும், வரலாற்று ஆதாரங்களையும் ஒருபுறம் வைத்தாலும், அது தன்னுள் கொண்டுள்ள தற்காலச் சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தற்காலக் கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை சற்றே விலக்கிக் காட்டியிருக்கிறார் பைரப்பா. வைரமுத்துகளையும், மனுஷ்யபுத்திரர்களையும், சீமான்களையும், அமீர்களையும் புரிந்து கொள்ள இந்நாவல் பெரிதும் உதவும். இந்நாவல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிண்டிலில் ஆங்கிலத்தில்தான் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் சந்தீப் பாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் புத்தகம் அருமையாக வந்திருக்கிறது. இந்நாவல் போலி முற்போக்காளர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாவதில் எந்த வியப்பும் இல்லை. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவலிது.

குறையெனக் காண ஒன்றுமில்லை; இருப்பினும் நசீரின் பாத்திரத்தையும், சாஸ்திரியின் மகனுடைய பாத்திரத்தையும் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

இந்த நாவலனூடே கதையின் நாயகி ரசியா எழுதும் நாவலில் உள்ள வரலாறும் உடன் பயணிக்கிறது. முழுக்க முழுக்க வரலாற்றுத் தகவல்கள் நிரம்பிய வேறொரு படைப்பாக இப்படைப்புக்குள்ளேயே அது பின்னிப்பிணைந்து செல்கிறது. கண்ணீரைத் தவிர்க்க முடியாது.

***

நாவலில் சொல்லப்பட்டுள்ள வரலாறு மற்றும் வரலாற்று ஆதாரங்களைத் தவிர்த்து, தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கதைக்களத்தின் சுருக்கத்தை என் பிற்கால நினைவுக்காக இங்கே பதிகிறேன். அது பின்வருமாறு:

பூனே திரைப்படக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் லட்சுமியும், அமீரும். முற்போக்குவாதிகளான அவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கம் அதிகரித்துக் காதலிக்கவும் தொடங்குகிறார்கள். எண்ணற்ற விடுதிகளில் மகிழ்ந்திருக்கிறார்கள். அமீரின் குழந்தையைக் கருவில் தாங்கும் நிலையானது, அமீரிடம் தான் கொண்ட காதலைத் தன் தந்தையிடம் தெரிவித்து, தங்கள் திருமணத்திற்கான அவரது ஒப்புதலைப் பெற லட்சுமியை நிர்ப்பந்திக்கிறது.

காந்தியவாதியான நரசிம்மகௌடா நரசபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு சமூக ஆர்வலர். சிறு வயதிலேயே மனைவியை இழந்தாலும், மற்றொரு திருமணத்தைச் செய்து கொள்ளாமல் தன் மகளுக்காகவே வாழ்கிறார். லட்சுமியின் காதலைக் கேட்டதும் அதிர்கிறார். “கோவில்களை இடிக்கும் பேரப்பிள்ளையைப் பெறத் தான் விரும்பவில்லை” என்று லட்சுமியின் காதல் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். தன் தந்தை மற்றும் தன் கிராமத்திடம் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு அமீரின் கரம்பற்றுகிறாள் லட்சுமி.

பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். தன் குடும்பத்திற்கு அஞ்சும் அமீர் இஸ்லாமிய முறைப்படியே திருமணம் நடைபெற வேண்டும் என்கிறான். தான் மதம் மாறவிரும்பவில்லை என்று லட்சுமி சொல்கிறாள். அவளது கிராமத்தைச் சேர்ந்த பொதுவுடைமைவாதி சாஸ்திரி மதம் மாறுவதில் பிழையில்லை என்று லட்சுமிக்கு ஊக்கமளிக்கிறான். சாஸ்திரியின் தந்தை, லட்சுமியின் தந்தையுடைய நண்பராவார். சாஸ்திரியும், குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு வெளிநாட்டுக் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தவனாவான். அவளைத் திருமணம் செய்து கொள்ள இவன் மதம் மாறாவிட்டாலும், இப்போது லட்சுமியை மாறத் தூண்டினான். அவன் கேட்ட சில கேள்விகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, லட்சுமி மதம் மாறத் துணிகிறாள்.

லட்சுமி ரசியாவாக மாறுகிறாள். தன் கணவனின் குடும்பத்துடன் கலக்க முடியாமல் திணறுகிறாள். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆவணப்படங்கள் எடுப்பதைத் தொழிலாகக் கொள்கிறார்கள். இஸ்லாமியப் பெரியோர்கள் தங்கள் குடும்பத்துக்குள் புகுந்து, இவர்கள் தூய இஸ்லாமைப் பின்பற்றுகிறார்களா என்று சோதிப்பதும் நிகழ்கிறது. மகன் நசீரும் பிறந்து விடுகிறான். “உன் மனைவி ஏன் மாட்டிறைச்சி உண்பதில்லை” என்று அமீரைக் கேட்கிறார்கள். குடும்பத்திற்கேற்றவாறு நெகிழ்ந்து செல்லுமாறு அமீர் ரசியாவைக் கோருகிறான். முதலில் மறுக்கும் அவள், தன் கணவனுக்காக மாட்டிறைச்சி உண்கிறாள்.

ரசியா வேலைக்குச் செல்வதே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. புர்கா ஏன் அணிவதில்லை என்று கேட்கப்படுகிறாள். கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரச்சனை அதிகரிக்கிறது. மன உளைச்சலுக்கு உள்ளாகும் அமீர், தலாக் என்று ஒரு முறை சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறிவிடுகிறான். ரசியா கூனிக்குறுகி நிற்கிறாள். சாஸ்திரியைச் சந்திக்கிறாள். அவன் அவளைச் சமாதானம் செய்து அனுப்பிவைக்கிறான். சாஸ்திரியின் தலையீட்டுக்குப் பின்னர் அமீர் தனிக்குடித்தனம் செல்வோம் என ரசியாவிடம் கோருகிறான்.

அமீரின் நிலையைப் புரிந்து கொள்ளும் ரசியா அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கிறாள். நசீரை வளர்க்க ஓர் ஆயாவை நியமிக்கிறார்கள். இருப்பினும் நசீர் பெரும்பாலும் தன் தந்தையைப் பெற்ற தாத்தா பாட்டியிடமே வளர்கிறான். ரசியா திரைக்கதை எழுத, அமீர் இயக்கும் முற்போக்கு ஆவணப்படங்கள் கவனத்தைப் பெறுகின்றன. மெல்ல வளர்கிறார்கள். மெல்ல மெல்ல வயதும் கடக்கிறது. ஐம்பதை நெருங்குகிறார்கள். விஜயநகரத்தின் ஹம்பியைக் குறித்து ஆவணப்படம் இயக்கித்தரும்படியான கோரிக்கை அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. தம்பதியர் இருவரும் ஹம்பிக்குச் செல்கின்றனர். அங்கே காணும் உக்ர நரசிம்மர் சிலை, நரசபுரத்தின் நரசிம்மரை ரசியாவுக்கு நினைவுப்படுத்துகிறது. இந்தச் சிலையும், இது போன்ற மற்ற சிலைகளும், கோவில்களும் எவ்வாறு, யாரால் சிதைக்கப்பட்டது என்று சொல்லும் உரிமையில்லை. எந்த மதத்தையும் புண்படுத்தாமல் சொல்லப்பட வேண்டும். தன்னால் இந்தத் திரைக்கதையை எழுத முடியாது என்று ரசியா மறுக்கிறாள். கணவனுக்கும் மனைவிக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ரசியாவின் தந்தை நரசிம்ம கௌடா இறந்த செய்தியும் அவளை எட்டுகிறது.

நரசபுரத்தை அடையும் ரசியா, அங்கே சாஸ்திரியின் தந்தை மற்றும் தாயைச் சந்திக்கிறாள். இறுதிக் காலத்தில் தன் தந்தை வரலாற்றாய்வில் ஈடுபட்டிருந்ததை அவர்கள் மூலம் அறிகிறாள். தன் தந்தைக்கான ஈமக்கடன்களைச் செய்ய “இனி எப்போதும் மாட்டிறைச்சி உண்பதில்லை” என்ற உறுதிமொழியை ஏற்குமாறு சாஸ்திரியின் தந்தை சொல்கிறார். உடன்படுகிறாள். தந்தையின் வரலாற்றாய்வைக் காண்கிறாள். அவருடைய குறிப்புகள் மற்றும் நூல்களை ஆய்வு செய்கிறாள். மொகலாயக் காலத்தையும், இடிக்கப்பட்ட கோவில்களையும் குறித்த விபரங்களை விரிவாக அறிகிறாள். நாட்கள் நகருகின்றன. இடையிடையே அவள் பெங்களூரு சென்று அமீரைச் சந்தித்து வந்தாலும் அவர்களுக்கிடையே உண்டான விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவள் தேவையில்லாமல் இஸ்லாமை வெறுப்பதாக அவன் கருதுகிறான். ஒரு கட்டத்தில் அமீர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். செய்தி அறிந்து ரசியா துடிக்கிறாள். நான் இன்னும் உன்னை விவாகரத்துச் செய்ய வில்லை என்ற பதிலை அமீர் தருகிறான். மீண்டும் ஆய்வில் மூழ்குகிறாள்.

அவளது மகன் நசீர் அவளைக் காண நரசபுரத்திற்கு வருகிறான். அமெரிக்காவில் படித்துச் சௌதியில் வேலை செய்து வரும் நசீர், சௌதியின் பெருமைகளையும், இஸ்லாமின் மேன்மையையும் தன் தாய்க்கு எடுத்துரைக்கிறான். நசீரின் நிலைக்குத் தானே காரணம் என எண்ணி முற்போக்குவாதி ரசியா வருந்துகிறாள். நசீர் தன் தந்தை தன்னைவிட வயதில் இளைய பெண்ணை மணமுடித்திருப்பதால் அவர்களுடன் தங்காமல் தனியாக ஹோட்டல் விடுதியில் தங்கியிருப்பதாகச் சொல்கிறான். சௌதியில் பெண்பார்த்து மணமுடித்துக் கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று நசீரைக் கேட்கிறாள் ரசியா. சௌதி நாட்டவர் இந்தியர்களை மட்டுமல்ல வேறு யாரையும் இணையாக மதிப்பதில்லை என்று மெல்லிய குரலில் சொல்கிறான் நசீர். அவர்கள் பெண்கொடுக்கமாட்டார்கள். ரசியாவின் இரண்டும் கெட்டான் நிலையால் இந்திய முஸ்லிம்களும் பெண்கொடுக்கத் தயங்குவார்கள்.

ஒருநாள் ரசியா சாஸ்திரியை சந்திக்க நேர்கிறது. அவனது மகளைக் குறித்து விசாரிக்கிறாள். தீவிரக் கத்தோலிக்கரான சாஸ்திரியுடைய மனைவியின் வளர்ப்பில் வளர்ந்த அருணா, நசீரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். தாயின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமியராக மாறவும் உடன்படுகிறாள். சாஸ்திரி பதிவுத் திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கிறான். இருப்பினும் அருணா மறுக்கிறாள். அவர்களது திருமணம் நடக்கிறது. ரசியாவும், சாஸ்திரியும் சம்பந்தியாகிறார்கள்.

என்றுமில்லமால் சாஸ்திரிக்குத் தன் தாயாரின் நினைவாகவே இருந்தது. சாஸ்திரியின் தாயார் இறக்கிறார். தகவலை சாஸ்திரிக்குத் தெரிவிக்கிறாள் ரசியா. அவன் வருவதற்குள் சாஸ்திரியின் தந்தை தன் மருமகனை வைத்து தன் மனைவியை ஈமச்சிதைக்குக் கொடுக்கிறார். சாஸ்திரி தன் தாயாருக்கான இறுதிச் சடங்கை செய்ய வேண்டுமானால் ரசியா மேற்கொண்டதைப் போலத் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்கிறார் சாஸ்திரியின் தந்தை. உடன் இருக்கும் முற்போக்காளர்களுக்கு முன்னிலையில் எதையும் செய்யமுடியாமல் இருக்கிறான் சாஸ்திரி. சாஸ்திரியுடைய தாயாரின் அஸ்தியை அலாகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் கரைக்கச் செல்லும் அவர்களது குடும்பத்தாருடன் ரசியாவும் செல்கிறாள். காசியைக் காண்கிறாள். காசி விஸ்வநாதர் கோவில் எவ்வாறு அழிந்தது என்பதைத் தன் மனக்கண்ணால் காண்கிறாள்.

இந்தச் சில வருடங்களுக்குள் ரசியா தன் தந்தையின் ஆய்வு முழுவதையும் படித்து விட்டாள். தான் செய்திருக்கும் புதிய ஆய்வுகளையும் சேர்த்து ஒரு நாவல் எழுதத் தொடங்குகிறாள். டில்லியில் சாஸ்திரி ஏற்பாடு செய்திருக்கும் செமினாருக்கான அழைப்பு வருகிறது. அங்கே செல்கிறாள். ஃப்ளைட்டில் சாஸ்திரியைச் சந்திக்கிறாள். தன் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறான் சாஸ்திரி. அவனது மகனே முழு ஏற்பாட்டுக்கான செலவையும் ஏற்றுக் கொண்டதாக ரசியா அவனுக்குத் தெரிவிக்கிறாள். தாத்தா பாட்டி பேரன் ஆகியோர் வெகு காலத்திற்கு முன்பே இணைந்துவிட்டதையும் அவனுக்குத் தெரிவிக்கிறாள். சாஸ்திரி அதிர்கிறான். தன் மகன் இதை ஏன் தன்னிடம் மறைக்க வேண்டும் என்று துணுக்குறுகிறான். செமினார் தொடங்குகிறது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே செமினாரில் இருப்பதைக் கவனிக்கிறாள். முன்னாட்களில் அவள் செய்து வந்த முற்போக்குப் பிரச்சாரங்களை மனத்தில் கொண்டு சாஸ்திரி தன்னை அழைத்திருப்பதாக ரசியா ஊகிக்கிறாள்.

செமினாரில் வரலாற்றை எவ்வாறு பார்க்க வேண்டும்? என்று சிலர் வரையறைகளைக் கூறுகின்றனர். ரசியாவின் முறை வரும்போது வரலாற்றை உள்ளபடியே சொல்வதே சிறந்தது என்று சொல்லி அதற்கான தன் வாதங்களை முன்வைக்கிறாள். சாஸ்திரி அதிர்கிறான். இருப்பினும் சமாளித்து அவளை அமரச் செய்கிறான். அமீர் அந்தச் செமினாரில் இருக்கிறான். ரசியா வெகுநாட்களுக்குப் பிறகு அவனைக் காண்கிறாள். அவன் அவளைப் பார்க்கவேயில்லை. தலையைக் குனிந்தபடி தன் ஃபைலையே பார்த்துக் கொண்டிருக்கிறான். தனியொருத்தியாகச் சபை முழுமைக்கும் அறைகூவல் விடுக்கும் தன் மனைவியின் திறனை எண்ணி எண்ணி வியக்கிறான். அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக அல்லவா பார்க்கிறாள் அவள்? இருப்பினும் அதை ஏற்கும் மனநிலையில் அவனில்லை. சொல்லாமல் கொள்ளாமல் செமினாரை விட்டு வெளியேறுகிறான் அமீர்.

ஒரு ஹோட்டலை அடைந்து, எப்போதும் குடிப்பதை விட அதிகமாகக் குடிக்கிறான். ரசியா இருந்தவரை தன் வாழ்வும், தொழிலும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இப்போது வாய்த்திருக்கும் மனைவி நல்லவள்; ஆனால் படிப்பறிவில்லாதவள். மேலும் அவளது சொந்தக்காரர்கள் அனைவரும் தன் பிளாட்டில் வந்து தங்கிவிட்டனர். ரசியாவிடம் ஒன்றியிருந்ததுபோல் அவளிடம் ஒன்றியிருக்க முடியவில்லையே என்று நினைக்கிறான். மதுவின் போதை துணிவைக் கொடுக்கிறது. ரசியா தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்கிறான். “நான் உன்னை இன்னும் விவாகரத்துச் செய்ய வில்லை. அவளை விவாகரத்துச் செய்யப் போகிறேன்” என்கிறான். ரசியா அவனுக்குப் புத்திமதி கூறி அவனது அறைக்கு அனுப்பி வைக்கிறாள்.

நரசபுரம் திரும்பி தான் பங்குகொண்ட செமினாரைக் குறித்த தன் பார்வையைக் கட்டுரையாக வடித்து, பல செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்புகிறாள். எவையும் அதைப் பதிப்பிக்க முன்வரவில்லை. ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று, தன் கட்டுரையை ஏன் பிரசுரிக்கவில்லை என்று கேட்கிறாள். அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிர்கிறாள். தன் நாவலை முழுமை செய்கிறாள். பதிப்பகங்களைத் தேடுகிறாள். எவரும் பதிப்பிக்க முன்வரவில்லை. அவளே தன் சொந்த செலவில் பதிப்பிக்கிறாள். பெரியோர்கள் பலருக்கும், நூலகங்கள் பலவற்றும் தன் படைப்பின் பிரதிகளை அனுப்பி வைக்கிறாள். ஒரு விமர்சனம் கூட வரவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின், “இந்த நாவல் பேராபத்தை ஏற்படுத்தும்” என்ற பொருளில் ஒரு விமர்சனம் காழ்ப்புடன் வெளிவருகிறது. அமீர் வேறொருவர் மூலம் அந்த நாவலைக் குறித்து அறிகிறான். தன் மனைவி நாவல் எழுதுகிறாள் என்பதே அவனுக்குத் தெரியாதிருந்தது. எவ்வளவு வருட உழைப்பு அது?

ரசியாவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வெளியே போலீஸ்காரர்கள். தன்னிடம் இருந்த பிரதிகள் அனைத்தையும் கைப்பற்றியதோடல்லாமல், தன் தந்தையின் குறிப்புகள், புத்தகங்கள், வரலாற்று நூல்கள் என அத்தனையையும் கைப்பற்றுகிறார்கள். என்ன செய்வது என்று அறியாமல் இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரள்கிறாள். முதல் முறையாக அமீர், நரசபுரத்திற்கு வந்து ரசியாவை அழைக்கிறான். ரசியா கைதுசெய்யப்படப்போகும் செய்தியைச் சொல்லி, அதற்கு முன் நாம் தப்ப வேண்டும் என்று ரசியாவைத் தூண்டுகிறான். ரசியா அமீரை வியப்புடன் பார்க்கிறாள். ரசியாவும் அமீரும் நரசபுரத்தில் இருந்து பிரதான சாலையில் செல்லாமல், கிராமங்களின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர். சாஸ்திரியின் வேலையே இது எனத் தம்பதியர் இருவரும் ஊகிக்கிறார்கள். அமீர் நாவலைக் குறிததும், அதற்கான தரவுகள் குறிததும் விசாரிக்கிறான். ரசியா தன் நாவலுக்குத் துணைபுரிந்த நூல்களின் பட்டியலை எழுதித் தருகிறாள். ரசியா புத்தகங்களை மீட்டாளா இல்லையா என்பதைச் சொல்லாமல் எஸ்.எல் பைரப்பாவின் “ஆவரண – திரை” நாவல் இத்தோடு நிறைவடைகிறது.

விஷ்ணுபுரம் விருது விழா 2017 – மனச்சுவட்டிலிருந்து

நாங்கள் நண்பர்கள் ஐவராக 15ந்தேதி இரவே கோவையை அடைந்தோம். நண்பர் சார்லஸ் ஆர்ஆர்கிராண்டில் அறைகளை முன்பதிவு செய்திருந்தார். சிறிது இளைப்பாறியதும், நண்பர் ஜெயவேலன் நடைபயிற்சி செல்லப்போகிறேன் வருகிறீர்களா? என்று கேட்டார். நான் நடைபயிற்சி செய்வதில்லை இருப்பினும், அவருடன் பேசிக் கொண்டிருக்கலாமே என்று சென்றேன். மனிதர் நேராக ராஜஸ்தானி சங்கம் வரையே அழைத்துச் சென்றுவிட்டார். கடந்த தொலைவு 4 கிலோமீட்டர். அறைக்குத் திரும்பியதோடு சேர்த்து மொத்தம் 8 கிலோமீட்டர். காலில் பயங்கர வலி ஏற்பட்டிருந்தாலும், இவ்வளவு தூரம் நடந்துவிட்டேனா என்ற மலைப்பு அதை மறக்கடித்தது. அதையும், அனைத்தையும் மறக்கடித்தது அடுத்த நாள் விழாவில் கலந்து கொண்ட படைப்பாளிகளையும், வாசகர்களையும் கண்ட பெருமலைப்பு.
ஓர் எழுத்தாளரால் எவ்வளவு சிறப்பான வாசகர்களை உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு திரு.ஜெயமோகன் அவர்கள். அவரது வாசகர்கள் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளருக்கான தரத்துடன் இருப்பதைக் காணும் எவராலும் வியப்படையாமல், மலைப்படையாமல் இருக்க முடியாது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடாகும் எந்த இலக்கிய நிகழ்ச்சியிலும் இதைக் காண முடியும் எனும்போது, வருடாவருடம் நடைபெறும் ஓர் இலக்கியத் திருவிழாவில் அஃது எந்த அளவுக்கு இருக்க முடியும்?
16ந்தேதி சற்றுத் தாமதமாகத் தான் விழா அரங்கை அடைந்தோம். அரங்கினுள் நுழையும்போதே தற்செயலாக வெளியே வந்த அரங்கா எங்களை வரவேற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் எப்படியேனும், அரங்காவின் வரவேற்பு எனக்குக் கிடைத்து விடுவது நற்பேறே. இராஜகோபாலன், கே.ஜெ.அசோக்குமார், தூயன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். இராஜகோபாலன் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தேனொழுகும் பேச்சுநடை அவருடையது. இப்போது படைப்பாளிகள் இருவரையும் அறிமுகம் செய்து அவர்களைப் பேட்டியெடுத்து, பிறரையும் கேள்வி கேட்க வைக்கும் தொகுப்பாளராக இருந்தார்.
அடுத்து ஆர்.அபிலாஷ் அவர்கள் மேடையேறினார். காலை எழுந்ததும் என்ன எழுதப்போகிறோம் என்ற சிந்தனையில் கணினித் திரையின் முன்பு அமரும் தன் அனுபவத்தை அவர் சொன்னபோது, எழுத்துக்காகத் தங்கள் வாழ்வையே எப்படி அர்ப்பணித்திருக்கிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள் என்பதை உணர முடிந்தது. பலர் கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் அபிலாஷ் அவர்கள் சொன்ன சில வார்த்தைகளைச் சுட்டிக் காட்டி, “உங்கள் பதில்கள் எதிர்மறை சிந்தனைகளையும், பொறுப்பற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறதே” என்று கேட்டார். “நாமாக இருந்தால் இந்தக் கேள்வியை எவ்வாறு எதிர்கொண்டிருப்போம்” என்று நினைத்த வேளையிலேயே எழுத்தாளர் அழகாக அந்தக் கேள்வியை எதிர்கொண்டார். தினந்தோறும் எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் என மொழியுடனேயே தொடர்பிலிருப்பவர்களுக்கு இஃது எளிதானதே என்பது அடுத்தடுத்து பேசிய படைப்பாளிகளின் பேச்சுகளிலும் எதிரொலித்தது.
அபிலாஷ் அவர்கள் பேசி முடித்ததும் தேனீர் இடைவேளை. அரங்கிற்கு வந்ததிலிருந்தே திரு.ஜெயமோகன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்ததால், அவர் எழுந்ததும் அவரிடம்  சென்று என் வரவை அவரிடம் உறுதிசெய்து கொண்டேன். மகிழ்ச்சியாக வரவேற்று, என்னைச் சுவாமி பிரம்மானந்தா அவர்களிடமும், நவீன் அவர்களிடமும் அறிமுகம் செய்து வைத்தார். முழுமஹாபாரதம் குறித்தும் அவர்களிடம் சொன்னார். “நான் படிக்கிறேனே” என்று சுவாமி சொன்னார். அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியளித்தன.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு, “ஒளிர்நிழல்” சுரேஷ் மற்றும் விசால் ஆகியோர் மேடையேறினர். இளம் படைப்பாளிகளின் மேடை அனுபவத்தையும், ஒவ்வொரு கேள்வியை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் கண்டது மனத்திற்குக் களிப்பையளித்தது. சுரேஷிடம், ஒரு பெண்மணி, “உங்கள் படைப்புகளில் ஏன் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை அளிக்கிறீர்கள். உங்கள் படைப்பைப் படிக்கும்போதே அடுத்த வரியில் என்ன சொல்லப் போகிறாரோ என்ற நினைப்பே மனத்திற்கு அச்சத்தையளிக்கிறது. இதைத் தவிர்க்க முடியாதா?” என்று கேட்டார். ஜெயமோகன் பாசறையில் இருந்து வந்த ஒருவர் நுணுக்கமான தகவல்களை அளிக்கவில்லை என்றால்தானே அது பிழையாகும். அந்தக் கேள்வியே அந்தப் படைப்பாளியின் வெற்றியை உறுதி செய்தது. இரு படைப்பாளிகளும் அறிவார்த்தமுள்ள பதில்களைக் கொடுத்தனர்.
உணவு இடைவேளையின் போது, எழுத்தாளர் பிஏகே அவர்களைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. மனத்திற்குப் பிடித்த பெரும் ஆளுமைகளை மிக நெருக்கமாகக் காணும்போது சிலையாகச் சமைந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பது என் வாடிக்கையாகிவிட்டது. ஒரு வார்த்தையும் வெளியே வருவதில்லை. உடனிருந்தவருடன் அவர் பேசிக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அருகாமையை உணர முடிந்தது என் வாழ்வில் மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் ஒன்று. நாஞ்சில் நாடன் அவர்களை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். ஒருபோதும் அவரை நெருங்கத் துணிந்ததில்லை. இம்முறை மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பிஏகே, நாஞ்சில் நாடன் ஆகியோரின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஒருவேளை அவர்களிடம் கொண்ட பெருமதிப்பே மனத்திற்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறதோ என்னவோ.
மேடையில் போகன் பேசத் தொடங்கினார். நண்பர்களின் முகநூல் பதிவுகளில் அவரது பின்னூட்டங்களைக் கண்டிருக்கும் எனக்கு அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையில் தான் காணும் அனுபங்களையே எழுத்துகளாக வடிப்பதாகச் சொன்னார். ஆவிகள் மற்றும் அவற்றின் மீது கொண்ட நம்பிக்கை குறித்த பேச்சு எழுந்தது. கேள்விகளும், பதில்களும் தொடர்ந்தன. அவருடைய பேட்டி சிந்திக்கத்தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.
அடுத்ததாகக் கவிஞர் வெய்யில் மேடையேறினார். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிதைகளை அவர் அணுகும் விதத்தை அறிய முடிந்தது. புதுக்கவிதைகளைப் பொறுத்தமட்டில் நான் எப்போதும் அவற்றில் பேராவல் கொண்டதில்லை. ஆனால் வெய்யில் தன் கவிதைகளின் ஓரிரு வரிகளைச் சொன்னபோது, அவற்றின் பொருளில் உள்ள கவித்துவத்தை உணர முடிந்தது. புதுக்கவிதைகளைக் குறித்துப் புதிய திறப்புகள் கிடைத்தன. மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர், முடிவில் தன்னை அறியாமல் “இவ்வளவு எதிரிகளுக்கு மத்தியில் நான் உரையாற்றியதில்லை” என்று சொல்லிவிட்டார். அரங்கை சிரிப்பொலியும், கரவொலியும் கவ்விக் கொண்டன. அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. இருப்பினும் அரங்கு நிறைந்த கூட்டத்தில் எழுந்து நிற்கவே துணிச்சல் தேவைப்படும்போது வார்த்தைகள் வெளிவந்துவிடுமா என்ன? நல்ல வேளை, நான் கேட்க நினைத்த அனைத்துக் கேள்விகளையும் ஒருவர் கேட்டார். கிட்டத்தட்ட “நான் மார்க்சியவாதி அல்ல” என்று படைப்பாளியே ஏற்கும் நிலையை அவர் ஏற்படுத்தினார்.
மாலை ஆறு மணியாகிவிட்டது. உடன் வந்திருந்த நண்பர்கள் மருதமலை சென்றிருந்தனர். அறைக்குத் திரும்பிவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். நானும், நண்பர் ஜெயவேலன் அவர்களும் அறைக்குத் திரும்பலாம் என நினைத்தோம். பேருந்தில் செல்லலாமா? கேப் புக் செய்யலாமா? “வேண்டாம் நடந்தே சென்று விடலாமே. இன்று நடைபயிற்சியும் செய்ததுபோலாகுமே” என்றார் நண்பர் ஜெயவேலன். சரியென நடந்தே சென்றோம். வழியெங்கும் அந்த நாளின் நினைவுகளையே பேச்சில் அசைபோட்டுக் கொண்டு சென்றோம். “இப்படி ஒரு விழாவை வேறு எந்தப் படைப்பாளியாலும் செய்து காட்ட முடியுமா?”, “ஜெயமோகன் எவ்வாறெல்லாமல் சிறந்த விளங்குகிறார்?” மேலும், “எஸ்.ராமகிருஷ்ணன்”, “சாரு” என நண்பர் பேசிக் கொண்டே வந்தார். நாள் முழுவதும் இலக்கியங்களைக் குறித்தே கேட்டுக் கொண்டிருந்தது தியானம் போலல்ல; தவம் போலிருந்தது.
அடுத்த நாள் 17ந்தேதி காலை, நண்பர்கள் ஈஷா யோகமையம் செல்ல வேண்டும் என்றனர். மாலைதானே விருதுவழங்கும் விழா என்று அங்கே சென்றுவிட்டோம். தியான லிங்கத்தின் முன்பு அரைமணிநேரம் அமர்ந்திருந்தது மனத்தில் பேரமைதியைத் தந்தது. (அங்கு ஏற்பட்ட பரவச நிலையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்). அன்று அமாவாசையாம். “ஆதியோகியின் அருள் கிடைத்தது பெரும் வரம்” என்று சொன்னார்கள் நண்பர்கள். கோவை வந்ததிலிருந்து மொபைல் டவர் எடுக்கவில்லை. ஆதியோகி சிலையின் முன்பு புகைப்படம் எடுத்து ஜியோ கனெக்ட் செய்து முகநூலில் பகிர்ந்தேன். தற்செயலாக ஜிமெயில் நோட்டிஃபிகேஷன் கண்டேன். “என்ன ஆயிற்று? ஏன் உங்களைக் காணவில்லை” என்று ஜெயமோகன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். “பெரும் பிழை செய்துவிட்டோமே?” என்று மனம் கூசியது. “ஈஷாவில் இருக்கிறேன். வந்துவிடுவேன்” என்று அவருக்குப் பதில் அனுப்பினேன். தன் விழாவிற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவனைக் காணவில்லை. அவனுக்கு என்ன ஆயிற்றோ? என்ற அவரது அக்கறையை, ஒரு மூத்த சகோதரனின் பாசமாக உணர்ந்தேன்.
மாலை 6.30க்கு விழா அரங்கை அடைந்தேன். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தார். விரைந்து சென்று பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்து நவீன் பேசினார். மலேசியாவில் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் ஆகியவற்றைக் குறித்துப் பேசினார். விருது பெறும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களைக் குறித்தும் பெருமைப்படும் விதத்தில் பேசினார். இவர் போன்றவர்கள் இளமையிலேயே அடைந்திருக்கும் ஆளுமைத்திறனைக் கண்டு மனம் ஏங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.
அடுத்து மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் தன் இனிமையான குரலில் பேசத் தொடங்கினர். பேச்சிலும் இனிமையே தொடர்ந்தது. மொழிபெயர்ப்புகள் குறித்தும், மொழிபெயர்ப்புகளின் மூலம் மொழியடையும் உச்சத்தையும் குறித்துப் பேசினார். அவரது பேச்சு அருமையாக இருந்தது. அடுத்து இராஜகோபாலன் அவர்கள் பேசினார். சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளான, “மண்புழுக்கள்” நாவலையும், அவரது சிறுகதைகளையும் முன்வைத்துப் பேசினார். அவரது அருமையான பேச்சைக் குறித்து நான் உணர்ந்ததைத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் மேடையில் அறிவித்தார் என நினைத்தேன்.
ஜெயமோகன் பேச எழுந்ததும், பெரும் கரவொலி அரங்கை நிறைத்தது. அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே அரங்கிலிருந்தோர் அத்தனை பேரும் காத்திருந்ததாகப் பட்டது. பெரும் திரைப்பட நட்சத்திரம் எழுந்ததும், ரசிகர்களுக்கிடையே ஏற்படும் ஆர்ப்பரிப்பை ஒத்திருந்தது அந்த அரங்கம் நிறைந்த கரவொலி. பிஜி தீவைச் சார்ந்த தமிழர்களின் நிலை குறித்த பாரதியின் வரிகளைச் சுட்டிக் காட்டிப் பேசத் தொடங்கினார். புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மறந்த நிலை; தமிழ் அங்கே எச்சமாக மீந்திருப்பது; போற்றி வரிசையிலான மேற்குத் தீவுகளின் பாடல்கள்; கனடா மண்ணின் இயல் விருதை ஏற்றபோது அடைந்த அனுபவங்கள்; தென்னாப்பிரிக்காவில் தமிழும், தமிழர்களும்; டீனா படையாச்சி என்ற ஒரு தமிழர், தன்னைத் தமிழர் என்பதைக் கூட உணராமல் “தன் மூதாதையர்கள் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டதைச் சொல்லி, புலம் பெயர் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதைக் குறிப்பிட்டு, நவீனத் தமிழ் இலக்கியம் எதை நோக்கி நகரவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து. புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சீ.முத்துசாமி அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொல்லி, விருது எதற்காகத் தரப்பட்டது என்பதை ஆழப் பதிந்தார் ஜெயமோகன்.
சீ.முத்துசாமி அவர்களின் ஏற்புரை, புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலையை வெளிப்படையாக விமர்சித்தது. தமிழகத்தில் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கும் வரவேற்பை எண்ணி அவர் வியந்தது முரண்நகையைத் தந்தது. விழாவின் பிரம்மாண்டம் அவரை அவ்வாறு உணரச் செய்ததில் பிழையேதும் இல்லை. தமிழுலகின் இந்தப் பெருமிதத்திற்கு முற்றான காரணம் ஜெயமோகன் அவர்களே.
விழா முடிந்ததும், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் மற்றும் ஏனைய வாசகர்களால் சூழப்பட்டார் ஜெயமோகன். அனைவரின் முகத்தில் அப்படியொரு முதிர்ச்சியான மகிழ்ச்சிப் புன்னகை. இரண்டாம் நாள் மாலை வரை நடந்த நிகழ்வுகளை நான் தவறியது மாபெரும் பிழை என்றாலும், வேறொரு பிரம்மாண்டம் அன்று காலை முதல் மாலை வரை என் மனத்தை நிறைத்திருந்தது. இதுபோன்ற விழாக்களை என் வாழ்நாளில் இனி எப்போது காணப் போகிறேன்? அடுத்த விஷ்ணுபுரம் விழாவாக அஃது இருக்கும் என நம்புகிறேன்.
இன்று வீட்டை அடைந்ததும், புகைப்படங்களைப் பார்த்து, “இவர்தானே ஜெயமோகன் அங்கிள்” என்று என் மகன் கேட்டான். என் வீட்டில் மற்றொரு வாசகன் உருவாகி வருகிறான். பேருணர்வை உவந்தளித்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்