ஆவரண – திரை

போலி முற்போக்குவாதத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது எஸ்.எல்.பைரப்பாவின் “ஆவரண – திரை” என்ற நாவல். வரலாற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பாலபாடத்தை இந்நாவலில் நாம் காணலாம். வரலாற்றை உள்ளபடியே ஆதாரத்துடன் நிறுவுகிறது. நாவலில் சொல்லப்பட்டுள்ள வரலாற்றையும், வரலாற்று ஆதாரங்களையும் ஒருபுறம் வைத்தாலும், அது தன்னுள் கொண்டுள்ள தற்காலச் சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தற்காலக் கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை சற்றே விலக்கிக் காட்டியிருக்கிறார் பைரப்பா. வைரமுத்துகளையும், மனுஷ்யபுத்திரர்களையும், சீமான்களையும், அமீர்களையும் புரிந்து கொள்ள இந்நாவல் பெரிதும் உதவும். இந்நாவல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிண்டிலில் ஆங்கிலத்தில்தான் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் சந்தீப் பாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் புத்தகம் அருமையாக வந்திருக்கிறது. இந்நாவல் போலி முற்போக்காளர்களின் கடும் கண்டனத்திற்குள்ளாவதில் எந்த வியப்பும் இல்லை. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவலிது.

குறையெனக் காண ஒன்றுமில்லை; இருப்பினும் நசீரின் பாத்திரத்தையும், சாஸ்திரியின் மகனுடைய பாத்திரத்தையும் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

இந்த நாவலனூடே கதையின் நாயகி ரசியா எழுதும் நாவலில் உள்ள வரலாறும் உடன் பயணிக்கிறது. முழுக்க முழுக்க வரலாற்றுத் தகவல்கள் நிரம்பிய வேறொரு படைப்பாக இப்படைப்புக்குள்ளேயே அது பின்னிப்பிணைந்து செல்கிறது. கண்ணீரைத் தவிர்க்க முடியாது.

***

நாவலில் சொல்லப்பட்டுள்ள வரலாறு மற்றும் வரலாற்று ஆதாரங்களைத் தவிர்த்து, தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கதைக்களத்தின் சுருக்கத்தை என் பிற்கால நினைவுக்காக இங்கே பதிகிறேன். அது பின்வருமாறு:

பூனே திரைப்படக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் லட்சுமியும், அமீரும். முற்போக்குவாதிகளான அவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கம் அதிகரித்துக் காதலிக்கவும் தொடங்குகிறார்கள். எண்ணற்ற விடுதிகளில் மகிழ்ந்திருக்கிறார்கள். அமீரின் குழந்தையைக் கருவில் தாங்கும் நிலையானது, அமீரிடம் தான் கொண்ட காதலைத் தன் தந்தையிடம் தெரிவித்து, தங்கள் திருமணத்திற்கான அவரது ஒப்புதலைப் பெற லட்சுமியை நிர்ப்பந்திக்கிறது.

காந்தியவாதியான நரசிம்மகௌடா நரசபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு சமூக ஆர்வலர். சிறு வயதிலேயே மனைவியை இழந்தாலும், மற்றொரு திருமணத்தைச் செய்து கொள்ளாமல் தன் மகளுக்காகவே வாழ்கிறார். லட்சுமியின் காதலைக் கேட்டதும் அதிர்கிறார். “கோவில்களை இடிக்கும் பேரப்பிள்ளையைப் பெறத் தான் விரும்பவில்லை” என்று லட்சுமியின் காதல் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். தன் தந்தை மற்றும் தன் கிராமத்திடம் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு அமீரின் கரம்பற்றுகிறாள் லட்சுமி.

பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். தன் குடும்பத்திற்கு அஞ்சும் அமீர் இஸ்லாமிய முறைப்படியே திருமணம் நடைபெற வேண்டும் என்கிறான். தான் மதம் மாறவிரும்பவில்லை என்று லட்சுமி சொல்கிறாள். அவளது கிராமத்தைச் சேர்ந்த பொதுவுடைமைவாதி சாஸ்திரி மதம் மாறுவதில் பிழையில்லை என்று லட்சுமிக்கு ஊக்கமளிக்கிறான். சாஸ்திரியின் தந்தை, லட்சுமியின் தந்தையுடைய நண்பராவார். சாஸ்திரியும், குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு வெளிநாட்டுக் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தவனாவான். அவளைத் திருமணம் செய்து கொள்ள இவன் மதம் மாறாவிட்டாலும், இப்போது லட்சுமியை மாறத் தூண்டினான். அவன் கேட்ட சில கேள்விகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, லட்சுமி மதம் மாறத் துணிகிறாள்.

லட்சுமி ரசியாவாக மாறுகிறாள். தன் கணவனின் குடும்பத்துடன் கலக்க முடியாமல் திணறுகிறாள். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆவணப்படங்கள் எடுப்பதைத் தொழிலாகக் கொள்கிறார்கள். இஸ்லாமியப் பெரியோர்கள் தங்கள் குடும்பத்துக்குள் புகுந்து, இவர்கள் தூய இஸ்லாமைப் பின்பற்றுகிறார்களா என்று சோதிப்பதும் நிகழ்கிறது. மகன் நசீரும் பிறந்து விடுகிறான். “உன் மனைவி ஏன் மாட்டிறைச்சி உண்பதில்லை” என்று அமீரைக் கேட்கிறார்கள். குடும்பத்திற்கேற்றவாறு நெகிழ்ந்து செல்லுமாறு அமீர் ரசியாவைக் கோருகிறான். முதலில் மறுக்கும் அவள், தன் கணவனுக்காக மாட்டிறைச்சி உண்கிறாள்.

ரசியா வேலைக்குச் செல்வதே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. புர்கா ஏன் அணிவதில்லை என்று கேட்கப்படுகிறாள். கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரச்சனை அதிகரிக்கிறது. மன உளைச்சலுக்கு உள்ளாகும் அமீர், தலாக் என்று ஒரு முறை சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறிவிடுகிறான். ரசியா கூனிக்குறுகி நிற்கிறாள். சாஸ்திரியைச் சந்திக்கிறாள். அவன் அவளைச் சமாதானம் செய்து அனுப்பிவைக்கிறான். சாஸ்திரியின் தலையீட்டுக்குப் பின்னர் அமீர் தனிக்குடித்தனம் செல்வோம் என ரசியாவிடம் கோருகிறான்.

அமீரின் நிலையைப் புரிந்து கொள்ளும் ரசியா அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கிறாள். நசீரை வளர்க்க ஓர் ஆயாவை நியமிக்கிறார்கள். இருப்பினும் நசீர் பெரும்பாலும் தன் தந்தையைப் பெற்ற தாத்தா பாட்டியிடமே வளர்கிறான். ரசியா திரைக்கதை எழுத, அமீர் இயக்கும் முற்போக்கு ஆவணப்படங்கள் கவனத்தைப் பெறுகின்றன. மெல்ல வளர்கிறார்கள். மெல்ல மெல்ல வயதும் கடக்கிறது. ஐம்பதை நெருங்குகிறார்கள். விஜயநகரத்தின் ஹம்பியைக் குறித்து ஆவணப்படம் இயக்கித்தரும்படியான கோரிக்கை அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. தம்பதியர் இருவரும் ஹம்பிக்குச் செல்கின்றனர். அங்கே காணும் உக்ர நரசிம்மர் சிலை, நரசபுரத்தின் நரசிம்மரை ரசியாவுக்கு நினைவுப்படுத்துகிறது. இந்தச் சிலையும், இது போன்ற மற்ற சிலைகளும், கோவில்களும் எவ்வாறு, யாரால் சிதைக்கப்பட்டது என்று சொல்லும் உரிமையில்லை. எந்த மதத்தையும் புண்படுத்தாமல் சொல்லப்பட வேண்டும். தன்னால் இந்தத் திரைக்கதையை எழுத முடியாது என்று ரசியா மறுக்கிறாள். கணவனுக்கும் மனைவிக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ரசியாவின் தந்தை நரசிம்ம கௌடா இறந்த செய்தியும் அவளை எட்டுகிறது.

நரசபுரத்தை அடையும் ரசியா, அங்கே சாஸ்திரியின் தந்தை மற்றும் தாயைச் சந்திக்கிறாள். இறுதிக் காலத்தில் தன் தந்தை வரலாற்றாய்வில் ஈடுபட்டிருந்ததை அவர்கள் மூலம் அறிகிறாள். தன் தந்தைக்கான ஈமக்கடன்களைச் செய்ய “இனி எப்போதும் மாட்டிறைச்சி உண்பதில்லை” என்ற உறுதிமொழியை ஏற்குமாறு சாஸ்திரியின் தந்தை சொல்கிறார். உடன்படுகிறாள். தந்தையின் வரலாற்றாய்வைக் காண்கிறாள். அவருடைய குறிப்புகள் மற்றும் நூல்களை ஆய்வு செய்கிறாள். மொகலாயக் காலத்தையும், இடிக்கப்பட்ட கோவில்களையும் குறித்த விபரங்களை விரிவாக அறிகிறாள். நாட்கள் நகருகின்றன. இடையிடையே அவள் பெங்களூரு சென்று அமீரைச் சந்தித்து வந்தாலும் அவர்களுக்கிடையே உண்டான விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவள் தேவையில்லாமல் இஸ்லாமை வெறுப்பதாக அவன் கருதுகிறான். ஒரு கட்டத்தில் அமீர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். செய்தி அறிந்து ரசியா துடிக்கிறாள். நான் இன்னும் உன்னை விவாகரத்துச் செய்ய வில்லை என்ற பதிலை அமீர் தருகிறான். மீண்டும் ஆய்வில் மூழ்குகிறாள்.

அவளது மகன் நசீர் அவளைக் காண நரசபுரத்திற்கு வருகிறான். அமெரிக்காவில் படித்துச் சௌதியில் வேலை செய்து வரும் நசீர், சௌதியின் பெருமைகளையும், இஸ்லாமின் மேன்மையையும் தன் தாய்க்கு எடுத்துரைக்கிறான். நசீரின் நிலைக்குத் தானே காரணம் என எண்ணி முற்போக்குவாதி ரசியா வருந்துகிறாள். நசீர் தன் தந்தை தன்னைவிட வயதில் இளைய பெண்ணை மணமுடித்திருப்பதால் அவர்களுடன் தங்காமல் தனியாக ஹோட்டல் விடுதியில் தங்கியிருப்பதாகச் சொல்கிறான். சௌதியில் பெண்பார்த்து மணமுடித்துக் கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று நசீரைக் கேட்கிறாள் ரசியா. சௌதி நாட்டவர் இந்தியர்களை மட்டுமல்ல வேறு யாரையும் இணையாக மதிப்பதில்லை என்று மெல்லிய குரலில் சொல்கிறான் நசீர். அவர்கள் பெண்கொடுக்கமாட்டார்கள். ரசியாவின் இரண்டும் கெட்டான் நிலையால் இந்திய முஸ்லிம்களும் பெண்கொடுக்கத் தயங்குவார்கள்.

ஒருநாள் ரசியா சாஸ்திரியை சந்திக்க நேர்கிறது. அவனது மகளைக் குறித்து விசாரிக்கிறாள். தீவிரக் கத்தோலிக்கரான சாஸ்திரியுடைய மனைவியின் வளர்ப்பில் வளர்ந்த அருணா, நசீரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். தாயின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமியராக மாறவும் உடன்படுகிறாள். சாஸ்திரி பதிவுத் திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கிறான். இருப்பினும் அருணா மறுக்கிறாள். அவர்களது திருமணம் நடக்கிறது. ரசியாவும், சாஸ்திரியும் சம்பந்தியாகிறார்கள்.

என்றுமில்லமால் சாஸ்திரிக்குத் தன் தாயாரின் நினைவாகவே இருந்தது. சாஸ்திரியின் தாயார் இறக்கிறார். தகவலை சாஸ்திரிக்குத் தெரிவிக்கிறாள் ரசியா. அவன் வருவதற்குள் சாஸ்திரியின் தந்தை தன் மருமகனை வைத்து தன் மனைவியை ஈமச்சிதைக்குக் கொடுக்கிறார். சாஸ்திரி தன் தாயாருக்கான இறுதிச் சடங்கை செய்ய வேண்டுமானால் ரசியா மேற்கொண்டதைப் போலத் தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்கிறார் சாஸ்திரியின் தந்தை. உடன் இருக்கும் முற்போக்காளர்களுக்கு முன்னிலையில் எதையும் செய்யமுடியாமல் இருக்கிறான் சாஸ்திரி. சாஸ்திரியுடைய தாயாரின் அஸ்தியை அலாகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் கரைக்கச் செல்லும் அவர்களது குடும்பத்தாருடன் ரசியாவும் செல்கிறாள். காசியைக் காண்கிறாள். காசி விஸ்வநாதர் கோவில் எவ்வாறு அழிந்தது என்பதைத் தன் மனக்கண்ணால் காண்கிறாள்.

இந்தச் சில வருடங்களுக்குள் ரசியா தன் தந்தையின் ஆய்வு முழுவதையும் படித்து விட்டாள். தான் செய்திருக்கும் புதிய ஆய்வுகளையும் சேர்த்து ஒரு நாவல் எழுதத் தொடங்குகிறாள். டில்லியில் சாஸ்திரி ஏற்பாடு செய்திருக்கும் செமினாருக்கான அழைப்பு வருகிறது. அங்கே செல்கிறாள். ஃப்ளைட்டில் சாஸ்திரியைச் சந்திக்கிறாள். தன் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறான் சாஸ்திரி. அவனது மகனே முழு ஏற்பாட்டுக்கான செலவையும் ஏற்றுக் கொண்டதாக ரசியா அவனுக்குத் தெரிவிக்கிறாள். தாத்தா பாட்டி பேரன் ஆகியோர் வெகு காலத்திற்கு முன்பே இணைந்துவிட்டதையும் அவனுக்குத் தெரிவிக்கிறாள். சாஸ்திரி அதிர்கிறான். தன் மகன் இதை ஏன் தன்னிடம் மறைக்க வேண்டும் என்று துணுக்குறுகிறான். செமினார் தொடங்குகிறது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே செமினாரில் இருப்பதைக் கவனிக்கிறாள். முன்னாட்களில் அவள் செய்து வந்த முற்போக்குப் பிரச்சாரங்களை மனத்தில் கொண்டு சாஸ்திரி தன்னை அழைத்திருப்பதாக ரசியா ஊகிக்கிறாள்.

செமினாரில் வரலாற்றை எவ்வாறு பார்க்க வேண்டும்? என்று சிலர் வரையறைகளைக் கூறுகின்றனர். ரசியாவின் முறை வரும்போது வரலாற்றை உள்ளபடியே சொல்வதே சிறந்தது என்று சொல்லி அதற்கான தன் வாதங்களை முன்வைக்கிறாள். சாஸ்திரி அதிர்கிறான். இருப்பினும் சமாளித்து அவளை அமரச் செய்கிறான். அமீர் அந்தச் செமினாரில் இருக்கிறான். ரசியா வெகுநாட்களுக்குப் பிறகு அவனைக் காண்கிறாள். அவன் அவளைப் பார்க்கவேயில்லை. தலையைக் குனிந்தபடி தன் ஃபைலையே பார்த்துக் கொண்டிருக்கிறான். தனியொருத்தியாகச் சபை முழுமைக்கும் அறைகூவல் விடுக்கும் தன் மனைவியின் திறனை எண்ணி எண்ணி வியக்கிறான். அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக அல்லவா பார்க்கிறாள் அவள்? இருப்பினும் அதை ஏற்கும் மனநிலையில் அவனில்லை. சொல்லாமல் கொள்ளாமல் செமினாரை விட்டு வெளியேறுகிறான் அமீர்.

ஒரு ஹோட்டலை அடைந்து, எப்போதும் குடிப்பதை விட அதிகமாகக் குடிக்கிறான். ரசியா இருந்தவரை தன் வாழ்வும், தொழிலும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இப்போது வாய்த்திருக்கும் மனைவி நல்லவள்; ஆனால் படிப்பறிவில்லாதவள். மேலும் அவளது சொந்தக்காரர்கள் அனைவரும் தன் பிளாட்டில் வந்து தங்கிவிட்டனர். ரசியாவிடம் ஒன்றியிருந்ததுபோல் அவளிடம் ஒன்றியிருக்க முடியவில்லையே என்று நினைக்கிறான். மதுவின் போதை துணிவைக் கொடுக்கிறது. ரசியா தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்கிறான். “நான் உன்னை இன்னும் விவாகரத்துச் செய்ய வில்லை. அவளை விவாகரத்துச் செய்யப் போகிறேன்” என்கிறான். ரசியா அவனுக்குப் புத்திமதி கூறி அவனது அறைக்கு அனுப்பி வைக்கிறாள்.

நரசபுரம் திரும்பி தான் பங்குகொண்ட செமினாரைக் குறித்த தன் பார்வையைக் கட்டுரையாக வடித்து, பல செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்புகிறாள். எவையும் அதைப் பதிப்பிக்க முன்வரவில்லை. ஒவ்வொரு அலுவலகமாகச் சென்று, தன் கட்டுரையை ஏன் பிரசுரிக்கவில்லை என்று கேட்கிறாள். அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிர்கிறாள். தன் நாவலை முழுமை செய்கிறாள். பதிப்பகங்களைத் தேடுகிறாள். எவரும் பதிப்பிக்க முன்வரவில்லை. அவளே தன் சொந்த செலவில் பதிப்பிக்கிறாள். பெரியோர்கள் பலருக்கும், நூலகங்கள் பலவற்றும் தன் படைப்பின் பிரதிகளை அனுப்பி வைக்கிறாள். ஒரு விமர்சனம் கூட வரவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின், “இந்த நாவல் பேராபத்தை ஏற்படுத்தும்” என்ற பொருளில் ஒரு விமர்சனம் காழ்ப்புடன் வெளிவருகிறது. அமீர் வேறொருவர் மூலம் அந்த நாவலைக் குறித்து அறிகிறான். தன் மனைவி நாவல் எழுதுகிறாள் என்பதே அவனுக்குத் தெரியாதிருந்தது. எவ்வளவு வருட உழைப்பு அது?

ரசியாவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வெளியே போலீஸ்காரர்கள். தன்னிடம் இருந்த பிரதிகள் அனைத்தையும் கைப்பற்றியதோடல்லாமல், தன் தந்தையின் குறிப்புகள், புத்தகங்கள், வரலாற்று நூல்கள் என அத்தனையையும் கைப்பற்றுகிறார்கள். என்ன செய்வது என்று அறியாமல் இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரள்கிறாள். முதல் முறையாக அமீர், நரசபுரத்திற்கு வந்து ரசியாவை அழைக்கிறான். ரசியா கைதுசெய்யப்படப்போகும் செய்தியைச் சொல்லி, அதற்கு முன் நாம் தப்ப வேண்டும் என்று ரசியாவைத் தூண்டுகிறான். ரசியா அமீரை வியப்புடன் பார்க்கிறாள். ரசியாவும் அமீரும் நரசபுரத்தில் இருந்து பிரதான சாலையில் செல்லாமல், கிராமங்களின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர். சாஸ்திரியின் வேலையே இது எனத் தம்பதியர் இருவரும் ஊகிக்கிறார்கள். அமீர் நாவலைக் குறிததும், அதற்கான தரவுகள் குறிததும் விசாரிக்கிறான். ரசியா தன் நாவலுக்குத் துணைபுரிந்த நூல்களின் பட்டியலை எழுதித் தருகிறாள். ரசியா புத்தகங்களை மீட்டாளா இல்லையா என்பதைச் சொல்லாமல் எஸ்.எல் பைரப்பாவின் “ஆவரண – திரை” நாவல் இத்தோடு நிறைவடைகிறது.