ஆயிரம் உண்டிங்கு சாதி !

சாதியம் எங்கு தோன்றியது? வேதங்களிலா? உபநிஷத்துகளிலா? கீதையிலா? புராணங்களிலா? இதிகாசங்களிலா? எங்கு தேடினாலும் சாதி என்ற பிரிவு தெரியாமல் தொழில் அடிப்படையிலான பிரிவினைகள்தானே தெரிகின்றன. அதைச் சாதிகள் எனக் கொள்ள முடியாதே. சரி! ஒரு பேச்சுக்கு அதுதான் சாதி என்றாலும் நான்கு சாதிகள்தானே இருக்க வேண்டும் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்). ஆனால் ஆயிரக்கணக்கிலல்லவா சாதிகள் உள்ளன.

“யார் இந்த பிரிவினைகளை உருவாக்கியிருப்பார்கள்? அதற்கான சான்றுகள் ஏதேனும் உண்டா?”
“பிராமணர்கள் உருவாக்கி இருப்பார்கள்?” என பதில் வருகிறது.

பிராமணர்களுக்கு வேறு வேலையே இருந்திருக்காதோ? இல்லையே. இது நியாயமாகப் படவில்லையே. எங்கும் எதிலும் ஆதாரம் பற்றி பேசுபவர்கள்தான் இப்படி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள் எனத்தானே படுகிறது. எல்லாம் வெறும் யூகத்தினடிப்படையிலேயே. யூகத்தையே வரலாறாக மாற்றுகிறார்கள்.

இந்த சாதி ஏற்றத்தாழ்வுக்கு, இன்னும் பிராமணர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது. செத்த பாம்பிற்குச் சமானம். நாம் பிற்படுத்தப்பட்ட சாதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி என்று சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு இந்து மதக் கட்டமைப்பில் இன்னும் ஆதிக்க சாதிகளாகத் தானே இருக்கிறோம். நம் இன (பொதுவாகச் சொல்கிறேன் – தாழ்த்தப்பட்ட இன) சாதித் தலைவர்கள் சாதியம் பற்றிப் பேசுவதும், பார்ப்பன எதிர்ப்பு பற்றிப் பேசுவது “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்ட கதை” போல்தானே தெரிகிறது. அப்படி இருந்தும் நாம் பார்ப்பனர்களை மட்டுமே குற்றஞ்சாட்டுகிறோம். அனைவருக்கும் பொது எதிரியாக பார்ப்பனரை மட்டும் ஒதுக்குகிறோம். அவர்களை நாம்தான் தீண்டத்தகாதவர்களாக அடக்கி வருகிறோம் என்ற உணர்வு நமக்கு ஏன் ஏற்படவில்லை?

தமிழ் ஹிந்து இணையதளத்தில் கீழ்கண்ட பதிவைப் படித்தேன். அதை அப்படியே தருகிறேன்.

தமிழ் ஹிந்து இணையதளத்தில் கீழ்கண்ட பதிவைப் படித்தேன். அதை அப்படியே தருகிறேன்.

ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்
“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன? உங்களுக்கு ஏன் திருப்தி?” என ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களை போல மனித இனம்தானே? எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால் வாடும் போது, தாகத்தால் வாடும் போது, ஆன்மிக உணர்வுடன் தேடும் போது கல்விசாலை, பொதுநீர்நிலை, கிணறு, கோவில் போன்ற பொதுநல வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன செய்வீர்கள்?

நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா? எங்களுக்கும் தேச பெருமையூனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற உணர்ச்சிகள் இருக்காதா? நாங்கள் எத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், சுரண்டல்களையும், அவமானங்களையும், அல்லல்களையும் அனுபவிப்பது? எங்கள் தேசாபிமானத்தை நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள் மீது குவித்து எங்கள் தன்மானமே அழியும் அளவுக்கு ஆக்கியிருக்கிறீர்கள். … யாருடைய பரிவோ பரோபகாரமோ எங்களுக்கு தேவை இல்லை. நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு… தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது.”
– பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள்

நன்றி: தமிழ்ஹிந்து.காம்

தாழ்த்தப்பட்டவரின் குரல் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? அவர்களை நாமல்லவா ஒடுக்குகிறோம். ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களை அடகு வைத்துவிட்டு குதூகலமடைகிறோம். யாராவது ஒரு பார்ப்பனர் “ஏனப்பா என்னை மட்டும் குறை சொல்கிறாய்?” அவருக்கு விளக்கம் கூறாமல் வசைமாரி பொழிவோம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் “இந்து மதத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தாங்கவில்லை” என்றப் போலிக் குற்றச்சாட்டைச் சுமத்தி கிறிஸ்தவ மதத்திலோ அல்லது வேறு ஏதாவது அந்நிய மதத்திலோ சேர்ந்து கொண்டு, அங்கும்போய் நமெ சாதிப்பற்றை மறக்காமல் நான் “கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ தேவர், கிறிஸ்தவ முதலியார், கிறிஸ்தவ நாயுடு, கிறிஸ்தவ வன்னியர்” என்றுச் சொல்லிக் கொண்டு அங்கும் போய் நம் சாதிப்பற்றைப் பரப்புவோம்.

பேராண்மை எது தெரியுமா? ஆயிரம் உண்டிங்கு ஜாதி ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற பாரதியின் கூற்றுக்கேற்றபடி மண்சார்ந்து, அந்த மண்ணில் நடக்கும் அநீதிகளை அகற்ற முயல்வதுதான். மதமாற்றம் புரட்சியல்ல. உண்மையிலேயே மனமாற்றம் உண்டானால் மதம் மாற வேண்டியதுதான். ஆனால் அக்கனமே நாம் அந்நியர் கைப்பிடியில் என்பதை மனதில் கொள்வோம். மண் சார்ந்து வாழ்வோம்.

பட்டியலினத்தவரையும் (SC / ST) தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கும் பெரும் சக்திகளாக ஆதிக்க சாதி (பிற்படுத்தப்பட்ட, மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட) சாதிகளான நாமே இருக்கிறோம் என்பதை எப்போது அறியப் போகிறோம். ஒவ்வொரு ஆதிக்க சாதி இந்துவின் மனநிலையும் மாறினாலே சாதியம் காணாமல் போய்விடும். ஒவ்வொரு ஆதிக்க சாதி இந்துவும் பட்டியலினத்தவருடனும் தாழ்த்தப்பட்டவருடனும் சரி சமமாக (அவர்களை சுயமரியாதையோடு, அவர்களும் தன்னைப்போல் ஒரு மனிதன் என்று எண்ணி) பழகினாலே சாதியம் ஒழிந்துவிடும். தீண்டாமை ஒழிந்துவிடும். இது சாத்தியமே. ஆனால் சாதி ஒழியாது. சாதித் தலைவர்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள், சாதிக் கட்சிகளும் இதை அனுமதிக்காது.

பள்ளியில் சேர்க்கும்போதோ, அல்லது வேலையில் சேரும்போதோ அல்லது எந்தவொரு அரசு சம்பந்தமான கோப்புகளுக்கோ சாதியைக் கேட்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்தாலொழிய சாதி ஒழியாது. இளைஞர்கள் நினைத்தால் சாதியம் ஒழிந்துவிடும், தீண்டாமை ஒழிந்துவிடும். அரசு நினைக்காமல் சாதி ஒழியாது.

சாதியம் களைவோம்! சாதியை ஒழிப்போம்!!

கம்யூனிச பொன்னுலகம்

 முன்பு ஒரு நாள், நான் ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “ஜனநாயகம் என்ற பேரில் முதலாளிகள் வாழ்கின்றனர். தொழிலாளர்கள் சாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்.” என்றார்.

“இந்த நிலை மாறணும்னா, என்ன செய்யணும் தோழர்” என்றேன்.

“புரட்சி வெடிக்க வேண்டும். கம்யூனிசம் ஜெயிக்க வேண்டும். அப்போது மேடு பள்ளம் இல்லாத சமூக நிலை உருவாகும்.” என்றார்.

“எப்படி அப்படி உருவாக முடியும்” என்றேன்.

“முதலாளிகளே இல்லாத நாட்டில் தொழிலாளர்கள் அவர்களே உற்பத்தி செய்து கிடைக்கும் லாபத்தில், சமமான ஊதியம், சமமான அந்தஸ்து என்று எல்லாம் சமமாகத்தானே கிடைக்கும்” என்றார்.

“அந்த உலகத்தை யார் ஆள்வார்கள் தோழர்” என்றேன்.

“மக்கள்தான் ஆள்வார்கள்” என்றார்.

“அதுதானே ஜனநாயகம்” என்றேன்

“இல்லை நான் சொல்லுவது கம்யூனிச சமத்துவம். நீங்கள் சொல்வது முதலாளித்துவ ஜனநாயகம்” என்றார்.

“அப்போ! கம்யூனிஸ்ட் ஆட்சியில் மக்கள்தான் தங்கள் பிரதிநிதிகளை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்களா?”

“இல்லை கட்சிக்காரர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள்” என்றார்.

“ஏன்! அது எப்படி மக்களாட்சி ஆகும்?” என்றேன்.

“கம்யூனிசத்தில் ஒரே கட்சி ஆட்சி முறைதான். மக்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளே பிறகு என்ன அது மக்களாட்சி தானே”

“இராணுவ ஆட்சி என்று பச்சையாக, நேரடியாகச் சொல்லாமல் விஞ்ஞானக் கம்யூனிசம் என்று அதிமேதாவித்தனமாக பூசி மொழுகி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் இது ஏதோ மதமாற்றம் போல் தெரிகிறதே. அவர்களுக்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் உங்களுக்கு அவர்களே மேல். அவர்களாவது, காசு, பணம், கல்வி என்று காட்டி மதம் மாற்றுகிறார்கள், மிஞ்சிப் போனால் வாளை நீட்டுவார்கள். ஆனால் நீங்களோ விஞ்ஞானம், விஞ்ஞான சோசலிசம், விஞ்ஞான கம்யூனிசம் என்று சொல்லி ஏமாற்றியல்லவா இளைஞர்களை விழுங்குகிறீர்கள். அவர்கள் உங்களையும் மேதாவிகளாக நினைத்து, தங்களையும் மேதாவிகளாக நினைத்து கையில் துப்பாக்கி ஏந்தி இஸ்லாமியத் தீவிரவாதி போல் திரிகிறார்கள் ஜிகாத்துக்காகக் (சோசலிசப் பொன்னுலகத்திற்கான புனிதப் போருக்காக) காத்திருக்கிறார்கள்” என்றேன்.

பதிலுக்கு அவர் என்னை பார்ப்பான் என்றார், நான் இல்லை, நான் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து வருபவன் என்றேன், அப்படியே இருந்தாலும் பார்ப்பனீயம் கற்றுக் கொடுத்ததை வாந்தி எடுப்பவர்கள் எல்லோரும் பாப்பான்கள்தான் என்றார். ஆரியச் சிந்தனை என்றார். இந்துத் தீவிரவாதி என்றார். இப்படியே சிறிது நேரம் என்னை வசைபாடிவிட்டுச் சென்றுவிட்டார்.

இன்று தினகரனில் தலையங்கம் படித்தேன். அதனால் இந்த மேற்கண்ட உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.

‘இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இந்த கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி இருக்கும்போதே இப்படியெல்லாம் நடக்கிறதே. இவர்கள் முழு இந்தியாவையும் ஆதிக்கம் செலுத்தினால் என்ன நடக்கும். கம்யூனிஸ்ட்களில் பலர் நல்லவர்களாய் இருப்பதாலேயே அந்தக் கட்சிக்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், அவர்கள் ஆட்சியைப் பிடித்தால் அந்த நல்லவர்கள் எப்படிக் கொலைகாரர்களாக மாறுவார்கள்’ என்பதை அந்தத் தலையங்கள் சூசகமாக தெரிவிப்பதாக நினைக்கிறேன்.

இனி…. 12.06.2012 தினகரன் தலையங்கம்

ஆமாம், கட்சியை காட்டிக் கொடுத்த துரோகிகளை போட்டுத் தள்ளினோம், என்ன தப்பு… என்ற கேள்வி கேரள அரசியலில் நீண்ட காலத்துக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கும்.  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து புது கட்சி தொடங்கிய டி.பி.சந்திரசேகரன் கொலையின் மர்ம முடிச்சுகள் விலகுவதற்கான தூரத்து அறிகுறிகூட தென்படவில்லை.

அவரது மரணம் குறித்து கட்சி மவுனம் காத்தபோது முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தனக்கே உரித்தான துணிச்சலுடன் அதை கண்டித்தார். கட்சியின் மாநில தலைமை பொறுப்பிலுள்ள பினராயி விஜயனின் ரத்தக்கொதிப்பு தாறுமாறாக எகிறும் அளவுக்கு விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவராக இருந்த எஸ்.ஏ.டாங்கேயின் சர்வாதிகார போக்குடன் விஜயனின் நிர்வாகத்தை ஒப்பிட்டார்.

விஜயன் இந்த வலையில் சிக்காமல் தப்பினாலும், அவரது தீவிர ஆதரவாளரான இடுக்கி மாவட்ட செயலாலர் எம்.எம்.மாணி மாட்டினார். ‘அரசியல்ரீதியாக யாரெல்லாம் நமக்கு எதிரிகள், துரோகிகள் என்ற பட்டியல் தயாரித்து அவர்களை ஒழித்துக் கட்டுவது புதிதல்ல. ஏற்கனவே பலரை அப்படி போட்டு தள்ளியிருக்கிறோம்’ என்று மாணி கொடுத்த விளக்கம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மக்களுக்கு அது எதிர்பாராத செய்தியல்ல என்றபோதிலும், ஒரு பொதுவுடமை கட்சியின் நிஜ முகம் அந்த கட்சியின் தோழர் மூலமாகவே அம்பலம் ஏறியதை வரவேற்றனர்.

இதற்கு மேலும் விஜயனை பதவியில் நீடிக்க விட்டால் கட்சிக்கு நல்லதில்லை என்று பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்துக்கு அச்சுதானந்தன் கடிதம் எழுதினார். அச்சுதானந்தனை விட்டுவைத்தால்  கட்சி காணாமல்போய்விடும் என்று விஜயனின் ஆட்கள் எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அச்சுதானந்தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மாநில அளவிலேயே பேசி தீர்த்துக் கொள்ளுமாறு பணித்துள்ளது. இரண்டு தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தலைமையை மாற்றியாக வேண்டும் என்ற கருத்தை அதில் அச்சுதானந்தன் பலமாக வலியுறுத்தியுள்ளார்.

மக்களிடம் பெரும் செல்வாக்கு இருப்பதால் அச்சுதானந்தன் மீதும், கட்சி அமைப்பை இரும்புப் பிடியில் வைத்திருப்பதால் விஜயன் மீதும் மார்க்சிஸ்ட் தலைமை கடைசி வரை நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தோழர்கள் பேசிக் கொள்வது மீண்டும் உண்மையாகி இருக்கிறது.

நன்றி: தினகரன்

அந்நிய மதங்கள் சிறுபான்மையா?

       ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது நண்பர் சொன்னார், “என்னதான் ஒரு தலித் மதம் மாறினாலும் அவனது சமூக அந்தஸ்தோ, சமூக மரியாதையோ அல்லது எந்த விதத்திலும் அவன் உயர்ந்துவிடவில்லை. ஆகவே, அவன் மதம் மாறினாலும் அவனுக்கான ஒதுக்கீடு அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை” என்றார்.

“இது இந்திய மதங்களுள் ஒன்றில் மாறினால் பொருந்தும் என்றால் சரிதான்.” என்றேன்.

“எல்லா மதமும் வெளிநாட்டு மதம்தான். இந்து மதம் என்ன இந்திய நாட்டில் தோன்றியதா? எங்கோ இருந்து வந்த பாப்பான் சொல்லிக் கொடுத்த மதம்தானே.” என்றார்.

“ஆரியர் வெளியே இருந்த வந்தனர் என்றக்கூற்று எப்போதோ வலுவிழந்து, சரித்திர ஆதரங்கள் முன்னால் மண்டியிட்டுப் போய்விட்டது. ஆனால், இன்னும் பள்ளிப்பாடங்களில் இருந்து எடுக்கத்தான் நமக்கு மனம் வரவில்லை. இந்து மதம் இந்தியாவில் தோன்றியதில்லை என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்றேன்.

“பார்ப்பனீயம் பேசும் நீங்க ஆயிரம் சொல்வீங்க. கவர்மெண்டே இன்னும் ஏத்துக்கல, நீ ஏத்துக்கோன்னு சொல்றீங்களே. உங்க மதம் நசுக்குனதுல நசுங்குனவங்க வேற மதம் மாறிய உடனே நிமிந்திடுவாங்களா? நீங்க சொல்ற வெளிநாட்டு மதங்கள் எல்லாம் இங்கு சிறுபான்மைதானே. அவங்களுக்கும் சரியான வாய்ப்புத் தரணுமே” என்றார் என் நண்பர்.

        “இந்து மதம் அல்லாத பிற இந்திய மதங்கள் அனைத்தும் சிறுபான்மைதான். கிறிஸ்தவமும் இஸ்லாமும் எப்படி சிறுபான்மையாகும். காளிமார்க் முன்னாடி கொக்கக்கோலா சிறுபான்மையா? அதனால்தான் இந்திய மதங்களுக்கு மாறினால் சிறுபான்மை இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொன்னேன்” என்றேன்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, நீங்க சொன்னதையே சொல்றீங்களே! ஒரு தலித் மற்ற மதத்திற்கு மாறிவிட்டதாலேயே அவனுக்கு சமூக நீதி கிடைத்துவிட்டதாக அர்த்தமா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை. இந்தக் குடிசையில் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றுதானே அந்த மாளிகைகளுக்கு மாறுகிறார்கள். அந்த மாளிகைகளில் அவர்கள் சௌக்கியமாக அல்லவா இருப்பார்கள். பிறகு எதற்கு இட ஒதுக்கீடு?” என்றேன்.

“மாளிகையிலும் அவர்கள் பெருக்குபவர்களாகவும், மலம் அள்ளுபவர்களாகவும்தானே இருக்கிறார்கள்?” என்றார்.

“அப்படியென்றால், அந்த மாளிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும். குடிசையிலேயே தங்கி இருக்கலாமே!”

“உங்க மதத்தில் சாதிக்கொடுமை, சாதிப்பாகுபாடு என்று இவ்வளவு குப்பைகளை வைத்துக் கொண்டு, யாரும் மதம் மாறக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வருகிறது'” என்றார்.

“நீங்கதானேங்க சொன்னீங்கள் அங்கப் போனாலும் மலம் தான் அள்ளுறாங்கன்னு, சாதிக்கொடுமை நீங்க இங்க மதத்துக்குள்ள இருந்து எவ்வளவோ பேர் பாடுபடுகிறார்கள். நாம இருக்கும் இடத்த நம்மதான் சுத்தமா வச்சிக்கணும். என் இடம் குப்ப குப்பன்னு சொல்லி அடுத்த வீட்டுல போய் படுத்துக்கக்கூடாது. அது அந்த தலித்துக்கு சொல்ல, உங்களுக்குச் சொல்றேன்.” என்றேன்.

“மதம் மாறிட்டா அப்படி என்னங்க உங்களுக்கு நஷ்டம். உங்களுக்குப் பிடிக்காதவன் உங்கள விட்டு போயிடுறான். உங்களுக்கு சந்தோஷம்தானே.” என்றார்.

“எனக்குப் பிடிக்காதவன் நீங்களே சொல்லிக்கிட்டா… அவனை ரொம்ப பிடிச்சவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. கொஞ்சம் கண்ணத் திறந்து பாருங்க. உங்க கண்முன்னாடியே நான் இருக்கேன். திரும்பி எல்லா பக்கமும் பாருங்க கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. இப்படியே இயேசு கூப்பிடுறாரு… நபி கூப்பிடுறாரு… அல்லா கூப்பிடுறாருன்னு எல்லாரும் மாறிட்டா… யோசிச்சுப் பாருங்க. நம்ம மண்ணோட அடையாளமே போயிடும்.” என்றேன்.

“இங்க இருக்கும் எல்லாரும் இந்த மண்ணுல பொறந்தவங்கதான். அப்புறம் எப்படிங்க நம் மண்ணோட அடையாளம் போயிடும்” என்றார்

“ஒரு உதாரணத்துக்கு இந்தியாவில் எல்லோரும் கிறிஸ்தவத்துக்கு மாறிட்டாங்கன்னு வச்சுக்குங்களேன். அவன்கிட்ட உன் புனித பூமி எதுன்னு கேட்டுப் பாருங்க? யெருசலோம்பான், பெத்லஹம்பான், முஸ்லிமா மாறிட்டா மெக்காம்பான், மெதினாம்பான். கண்டிப்பா தன் நாட்டுல ஒரு இடத்தையும் சொல்லமாட்டான். மாறாம இந்துவா இருந்தான்னா… ஏங்க எனக்கு உவரிங்கம்பான் ஒருத்தன், ஏங்க எனக்கு திருச்செந்தூர்ங்கம்பான் இன்னொருத்தன்… ஏங்க எனக்கு காசிங்கம்பான் இன்னொருத்தன். இப்படியே எந்த இந்திய மதங்களில் இருந்தாலும் தன் நாட்டு இடத்தைத்தான் சொல்வான். ஆக, மதம் மாறிட்டா அடிப்படையே மாறிடுதா?” என்றேன்.

“ஏங்க.. புனித பூமின்னு ஒரு விஷயம் மாறிட்டாதான் என்ன? இதுல மண்ணோட அடையாளம் என்ன மாறப் போகுது” என்றார் நண்பர்

“கிறிஸ்தவமும் இஸ்லாமும் எங்கெல்லாம் சென்றனவோ அங்கெல்லாம் வெற்றி வாகை சூடின, இந்தியாவைத் தவிர. ஒன்று வாள்முனையில் அல்லது அந்தக் குடிமக்களை காட்டுமிராண்டிகளாய் சித்தரித்து, தாங்கள் நேரடியாக கடவுளிடம் நாகரிகம் கற்றவர்கள் போல் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி, பொருளாசை காட்டி, சமூக அந்தஸ்தைக்காட்டி இப்படித்தான் எல்லா இடங்களிலும் ஏமாற்றி மதம் மாற்றினார்கள். அப்படி மாறின பல தேசங்களைப் பாருங்க… எகிப்து, பாரசீகம் போன்ற தேசங்கள் எவ்வளவு பழைமை வாய்ந்த தேசங்கள். அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒருகட்டத்தில் மதம் மாறிவர்கள்தான்… உலகமே காட்டுமிராண்டிகளாய் சுற்றித்திரியும் போது இந்தியாவிலும் மேற்சொன்ன தேசங்களில் வளர்ந்த நாகரிகம் இருந்தது. நாகரிகத்தின் உச்சியில் இருந்தவர்கள் அவர்கள். இன்று அவர்கள் தங்கள் பழம்பெருமையை எள்ளளவும் எண்ணிப்பார்ப்பதுண்டா. எகிப்து தேசத்தவனே, தன் பழம்பெருமைகளை எண்ணக் கூச்சப்படுகிறான். ஏனென்றால் இவன் இன்று வளர்ந்துவிட்டானாம். தன் மூதாதையர்கள் காபிர்களாம் (மூடர்களாம்). டேய் உன் மூதாதையர் இருந்ததிலிருந்து தேய்ந்து தேய்ந்து கட்டெரும்பாய் மாறிவிட்டாயே என்று அவனிடம் சென்று சொல்லிப் பாருங்கள். தான் அன்னியர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உணராதவனாக அவனது மதத்திற்காக உங்களை ஒரு சொருகு சொருகிவிடுவான்.” என்றேன்.

“ஏங்க… உங்க குத்தத்த மறைக்க என்னவெல்லாம் கதை அளக்கிறீங்க” என்றார் என் நண்பர்.

“சரி விடுங்க! இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல” என்றேன்.