அந்தமான் சுவடுகள் – 1

சங்கச் செயலாளர் பாட்சாவுடன் வேனில்

எங்கள் திருவொற்றியூர் அச்சக நலச் சங்கத்தின் சார்பில் ஐந்து நாள் சுற்றுலாவாக அந்தமானுக்குச் செல்வது என முடிவெடுத்திருந்தோம். முப்பத்துமூன்று உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் சங்கத்திலிருந்து இருபது பேர் இந்தச் சுற்றுலாவில் பங்கு கொண்டோம்.

திருவொற்றியூர் பேருந்து நிலையத்தின் அருகில் எங்கள் வேன் காத்திருந்தது. 22.02.2019, பகல் 12.35க்கு ஸ்பைஸ் ஜெட் விமானம். இரண்டு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால், காலை 8 மணிக்கே புறப்பட வேண்டும் என்பது ஏற்பாடு. சொன்ன நேரத்திற்குப் புறப்படவே முடியாது என்பது எழுதப்படாத விதியல்லவா? அதிலும் குழுவாகச் செல்லும்போது சாத்தியம் மிக மிகக் குறைவே. 8.30க்கு வேன் புறப்பட்டது. முதல் இருக்கையில் இருப்பவர், கடைசி இருக்கையில் இருப்பவரிடம் உரத்த குரலில் பேசிக் கொண்டும், கேலி பேசிக் கொண்டும் செல்லும் உற்சாகத்தை உணர்த்த எந்நாவாலும் இயலாது. எங்கள் குழு உற்சாக மிகுதியில் இருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. விமான நிலையத்தின் அருகில் சாலையோரத்தில் மரங்களுக்கடியில் அமர்ந்து காலை சிற்றுண்டியை உண்டோம். நான் உட்பட எங்கள் குழுவில் பலருக்கு இதுவே முதல் விமானப் பயணம். உணவருந்தும்போது பெரும்பாலும் விமானம் குறித்தே பேசிக் கொண்டிருந்தோம்.

வேன் உள்நாட்டு விமான நிலையத்தை அடைந்தது. பை சோதனைக்கு முன்பு காவலர் அறிவுறுத்தலின் பேரில் சிலர் தங்கள் பொருட்கள் சிலவற்றைக் குப்பைத்தொட்டியில் இட்டுக் கொண்டிருந்தனர். முகச்சவரம் குறித்து அதிகம் கவலைப்படாத நான், நண்பர்களின் ஏச்சுக்கஞ்சி சவரக்கத்தி மற்றும் கத்திரியை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை வீச வேண்டியிருந்தது. பைகள் சோதனைக்குப் பிறகு பயணிகள் காத்திருப்பு அறையில் விமானத்திற்காகக் காத்திருந்தோம். ரகரகமான மனிதர்கள் சுறுசுறுப்புடன் அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தனர். காலி இருக்கை ஒன்றைக் கண்டு அமர்ந்தேன். நண்பர்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரெனக் கூட்டத்தில் சலசலப்பு. துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வம் வந்து கொண்டிருந்ததால் காவலர்கள் அவருக்காக வழியேற்படுத்திக் கொண்டிருந்தனர். எந்த ஆடம்பரமோ, தொண்டரணிவரிசையோ இன்றி எளிமையாக நடந்து சென்றார் துணை முதல்வர்.

துணைத் தலைவர் சீனிவாசனுடன் விமானத்தில்

விமானம் தயாராக இருப்பதாக அறிவுப்பு வந்தவுடன் எங்கள் குழு வரிசையில் நின்றது. செவ்வாடையில் பொதியப்பட்ட பளிங்கு சிலைகளைப் போன்ற விமானப் பணிப்பெண்கள் எங்களை வரவேற்றனர். கைச்சுமைகளைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தோம். சீட் பெல்டுகளை அணிந்து கொள்ளச் சொன்னது விமான ஊழியரின் அறிவிப்புக் குரல். அறிவிக்கப்பட்டபடியே விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது. ரன்வேக்குச் செல்லும் வரை பேருந்து போலவே சென்ற விமானம் இலக்கை அடைந்ததும் பெருவேகத்துடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது. தலை கிறுகிறுத்தது. செவிப்பறைகள் அடைந்தடைந்து திறந்தன. ஐந்து முதல் பத்து நிமிடங்களில் நிலைமை சீரடைந்தது. வானுயரக் கட்டடங்கள் சுருங்கிச் சுருங்கி புள்ளிகளாக மறைவதையும், வெண்பஞ்சு மேகங்கள் கீழே மிதப்பதையும், கடலும், வானும் கலக்கும் நீள்வட்டக் கோடு தொலைவில் தெரிவதையும் கண்கள் கண்டுகளித்தன. இந்திரலோகம் என்பது இவ்வாறான ஒன்றாக ஏன் இருந்திருக்கக்கூடாது என்ற எண்ணம் மனக்குரங்குக்குப் புதிய திறப்புகளை அடையாளம் காட்டின. அருகில் இருந்த நண்பர்கள் தங்கள் உணர்வுகளைக் குதூகலத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

இரண்டு மணிநேரம் ஆகாயலோகவாசம். சோழன்குடாவைக் கடந்துவிட்டோம். சீட்பெல்டுகளை மீண்டும் அணிந்து கொண்டோம். நக்காவரத்தின் முதல் தீவு கண்ணில் பட்டது. விமானம் இடமும் வலமும் திரும்பியது. மெல்ல மெல்ல கீழே இறங்குவதாகத் தெரிந்த தோற்றம் பூமியை நெருங்க நெருங்க வேகம்பிடிப்பதாகத் தோன்றியது. மீண்டும் தலைகிறுகிறுப்பு, செவிப்பறையின் குருத்தெலும்புகள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டன. சக்கரம் ஓடுபாதையைத் தொட்ட அதிர்வு விமானம் பூமியை அடைந்துவிட்டதை உணர்த்தியது. இறங்கிய வேகத்திற்கு இணையாகவே மிக விரைவாக விமானம் நிறுத்தப்பட்டது. அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்க்கர் விமானநிலையத்தில் இறங்கப் போகிறோம். பல்லவனும், சோழனும் நடமாடிய மண்ணில் கால்பதிக்கிறோம் என்ற உணர்வு மனத்தைப் பேருவகைக் கொள்ளச் செய்தது. விடுதி செல்வதற்காக வேன் எங்களுக்காகக் காத்திருந்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் விடுதியை அடைந்தோம். ஹோட்டல் போர்ட் மெரிடியன் விடுதியின் ஊழியர்கள் எங்களுக்கான ஆறு அறைகளை ஒதுக்கித் தந்தனர். மூன்று மணியளவில் மதிய உணவை உட்கொண்ட பிறகு, சிற்றறைச் (செலூலார்) சிறைச்சாலையைக் காணச் செல்வதென ஏற்பாடு.

நாலரை மணியளவில் வேன் மூலம் சிறைச்சாலையை அடைந்தோம். அன்றைக்கு நாங்கள்தான் இறுதிக்குழு. எங்களை உள்ளே அனுமதித்ததும் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அது திரைப்படக் காட்சிகளை நினைவுப்படுத்தியது. சிறையின் பிரம்மாண்டம் கண்களைப் பறித்தது. மொத்தம் ஏழு பிரிவுகளைக் கொண்ட இச்சிறைச்சாலை இப்போது மூன்று பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஜப்பானியர்களால் இரண்டும், சுதந்திரமடைந்த பின்னர் இந்தியர்களால் இரண்டும் என நான்கு பிரிவுகள் இடிக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் சற்றுத் தொலைவில் ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இச்சிறையில் அடைபட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சித்தரிக்கும் படங்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட பிறகு, சிற்றறைச் சிறைகள் சிலவற்றைக் கண்டோம். சிலர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சென்று அடைபட்டுப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும் வீரர்கள் செய்த தியாகத்திற்கு இணையாக நின்று படம் எடுத்துக் கொள்ள மனம் நாணியது. சிற்றறைகளுக்கு வெளியே உள்ள பாதையே உள்ளத்திற்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அந்தமான் சிற்றறை சிறைச்சாலையின் மாதிரி வடிவமைப்புடன் திரு.செல்லப்பாண்டியன்

அப்போது அங்கே வந்த சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லப்பாண்டியன் அச்சிறை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டே ஒவ்வோர் அறையாகக் கடந்து சென்று சிறைச்சாலையின் மையப் பகுதியை அடைந்தோம். சிறைச்சாலையின் மாதிரி வடிவமைப்பு அங்கே வைக்கப்பட்டிருந்தது. அப்போது சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடம் சாவர்க்கர் இருந்த சிற்றறை எங்கே இருக்கிறதெனக் கேட்டேன். இரண்டாம் தளத்தின் இறுதி அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறைக்கு வெளியே மேலும் ஓரடுக்குச் சிறை கம்பிகள் இருந்தன. வேறெந்த அறைக்கும் அவ்வாறு இல்லை. சிலர் உள்ளே தியானம் செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மனத்துக்குள் ஏதோ பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அவ்வொலி வெளியேயும் கேட்டது. மனத்தின் இசைக்கு மொழியா அவசியம். அம்மனிதரின் உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தரையில் சாவர்க்கரின் புகைப்படம் இருந்தது. கண் மூடி அஞ்சலி செலுத்திய பிறகு, பக்கச் சுவர்களில் அவர் எழுதிய எழுத்துகள் ஏதும் தென்படுகின்றனவா எனப் பார்த்தேன். சுத்தமாக வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. எழுத்துகளுக்கான சுவடுகள் ஏதும் தெரியவில்லை.

சாவர்க்கரின் சிற்றறை

சாவர்க்கர் 1910ம் வருடம் தமது 28ம் வயதில் கைது செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனையாக ஐம்பது ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 4 ஜூலை 1911ல் அந்தமான் சிற்றறைச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அதே சிறையில்தான் தமது சகோதரரும் அடைபட்டிருந்தார் என்பதை அவர் அறியவே இரண்டு ஆண்டுகள் ஆகின. 1921 வரை அந்தமானில் கொடுஞ்சிறைவாசம். பட்ட பாடுகள் சொல்லிமாளாதவை. அந்தக் கொடிய காலத்திலும் சிறையில் இருந்த சக கைதிகளுக்கு எழுதவும் படிக்கவும் அவரால் கற்பிக்க முடிந்தது. 2 மே 1921ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 1924ல் விடுவிக்கப்பட்டாலும் கடுங்கட்டுப்பாடுகளுடன் கூடிய விடுதலையையே அவர் அடைந்தார். சாவர்க்கர் குறித்துப் படித்திருந்த சொற்களனைத்தும் காட்சிகளாக மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது. 1966ல் இறக்கும் வரை மண்ணுக்காகவே சிந்தித்த இம்மாமனிதன், ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என இகழும் புல்லர்களின் நாவில் எலும்புகள் முளைக்கட்டும் எனச் சபிக்கத் தோன்றியது. திரும்பி வாயிலை நோக்கினேன். கூட்டம் சற்றே குறைந்திருந்தது. உள்ளே இருந்து கம்பிகளுக்கு வெளியே தெரியும் மரங்களையும், வானத்தையும் கண்டேன். சாவர்க்கர் எத்தனை நாட்கள் இந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார். அந்தப் பார்வையில் எவ்வளவு வலி இருந்திருக்கும். சாவர்க்கரின் அறையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

பிறகு இறுதிக் குழுவோடு வெளியேறி சிறைச்சாலையின் கீழ்த்தளத்திற்கு வந்தோம். தூக்குமேடை இருக்கும் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்திற்கெல்லாம் மேடைப்பகுதி அடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கீழறை திறந்திருந்தது. ஒடுங்கிய வாயில்தான். குனிந்துதான் செல்ல வேண்டும். ஒருவர் ஒருவராகத்தான் செல்ல முடியும். இருட்டறையாக இருக்கிறது. கைபேசியின் விளக்கை எரியச் செய்தபடி தூக்கிலடப்படுபவர் தொங்கும் துளையைக் கண்டேன். பின்மண்டைத் தண்டில் சுர்ர் என்ற உணர்வு. ஆவிகள் அழுத்தினவா தெரியவில்லை. சுதந்திர தாகத்தில் இறந்தவர்கள் தொங்கிய அறையல்லவா? அதனாலோ என்னவோ எனக்குக் கடும் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. நாக்கும், உதடுகளும் வரண்டிருந்ததன. அந்த அறையைவிட்டு வெளியேறியதும், அருகிலேயே குடிநீர்க் குழாய்கள் இருந்தன. நாவின் தாகம் தணிந்தது. மீண்டும் சிறைவாயிலில் நின்றபோது மனம் கனத்திருந்தது.

இரவு ஏழரை மணிக்கு ஒளிக்காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகச் சொன்னார்கள். அது வரை என்ன செய்வது? விடுதிக்குச் சென்று திரும்புவது வெறும் அலைச்சலாகத் தான் முடியும். எனவே எங்கள் குழுவினர் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அங்கே இருந்த சாவர்க்கரின் சிலை அருகே எங்களில் நால்வர் அமர்ந்து தமிழக, இந்திய, சர்வதேச அரசியல்களை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். வேறு சிலர் பூங்காவின் அழகை ரசித்தபடி உலாவிக் கொண்டிருந்தனர். அந்தப் பூங்கா மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கிச் சரிந்து வளர்ந்திருந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நாங்கள். பூங்காவை முழுமையாகக் காணும் நோக்கோடு பள்ளப் பகுதியை நோக்கிச் சென்றோம். அழகான பூங்காதான். எனினும் வேறு எந்தப் பூங்காக்களையும் போலவே காதலர்களின் மறைவிடமாகத்தான் இதுவும் இருக்கிறது. பெரும்பாலும் வங்கர்களாகவே தெரிந்தனர். ஜெட்டி என்றழைக்கப்படும் சிறுதுறைமுகம் ஒன்று அங்கே இருக்கிறது. அந்த ஜெட்டிக்குள் செல்லாமல் வெளியில் உள்ள நீர்ப்பரப்பில் மனத்தை லயிக்கச் செய்தோம். கரையில் உள்ள சுவர்களனைத்திலும் சிப்பிகள் பதிந்திருந்தன. வண்ணவண்ண மீன்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் இவ்வாறான காட்சிகளிலேயே கழிந்தது. மூலையில் இருந்த சிறு ஓட்டலில் டீ அருந்தினோம். ஒளிக்காட்சிக்கான நேரம் நெருங்குவதை உணர்ந்த மெல்ல மீண்டும் உயரத்திற்கு ஏறி மீண்டும் சிறைச்சாலை முகப்பை அடைந்தோம்.

மணி 6.30 இருக்கும். சிறை வாசலில் நீண்ட வரிசை காத்திருந்தது. எங்கள் குழுவினரும் வரிசையில் இணைந்து கொண்டோம். அப்போதுதான் நின்று கொண்டிருப்பது எங்களுக்கு முந்தைய பேட்ச் பார்வையாளர்கள் என்பதை அறிந்து கொண்டோம். இப்போது செல்லும் பேட்ச் ஒளிக்காட்சியை ஆங்கிலத்தில் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இந்தி டிக்கெட். விடுதியைச் சார்ந்தவர்கள் என்ன நினைத்து இந்தி டிக்கெட் முன்பதிவு செய்தார்களோ? இந்தியர்களுக்கு இந்தி தெரியாமல் இருக்குமா என்று நினைத்திருக்கலாம். ஏழரை மணிக்கு இந்திக் காட்சி தொடங்கியது. ஒளிக்காட்சி அருமையாக இருந்தாலும் ஒன்றும் புரியவில்லை. மூன்று பேருக்கு தூக்கு. வெள்ளையர்களின் குரல்கள், சாவர்க்கர் குரல், சிறைக்குள் உண்ணாவிரதம் என்று ஒரு சிலவற்றை மட்டும்தான் புரிந்து கொள்ள முடிந்தது. காட்சி முடிந்தும் நிறைவில்லாமலே விடுதிக்குத் திரும்பினோம். இந்த ஒரு குறையைத் தவிர அன்றைய நாள் பயனுள்ளதாகவே அமைந்தது.

மஹாபாரதத்தில் சரணாகதி

ஓசூர், தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாதேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 26வது மாநாட்டில் வெளியிடப்பட்ட பிறைசூடன் மலரில் நான் எழுதிய  “மஹாபாரதத்தில் சரணாகதி” கட்டுரை பின்வருமாறு:

***

பரம்பொருளையே புகலிடமாகக் கொள்வது, அல்லது பரம்பொருளிடம் அடைக்கலம்புகுவது சரணாகதியெனச் சொல்லப்படுகிறது.

“அறக் கடமைகள் அனைத்தையும் கைவிட்டு, என்னையே ஒரே புகலிடமாகக் கொள்வாயாக. பாவங்கள் அனைத்திலும் இருந்து நான் உன்னை விடுவிப்பேன்; வருந்தாதே”. என பகவத்கீதையில் (18:66) கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்கிறான்.

இதற்கான ஓரிரு உதாரணங்களை விரிவாகக் காண்போம்.

சூதில் திரௌபதி வெல்லப்பட்டாள் என்று கௌரவச் சபை கருதுகிறது. திரௌபதி, சபையோர் முன் அவர்களின் நீதியின்மையைச் சொல்லி உண்மை நீதியை வழங்கும்படி மன்றாடுகிறாள்.

அப்போது எழுந்த விகர்ணன், “திரௌபதி வெல்லப்படவில்லை. சூதில் சூது செய்வது வெற்றியாகாது” எனச் சொல்லி நீண்ட உரை செய்து மொத்த கௌரவ சபையையும் கண்டித்தான். அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் விகர்ணனைப் பாராட்டி, கௌரவ சபையைக் கண்டித்தனர்.

இதனால் சினத்தின் எல்லையைக் கடந்த கர்ணன், தன் கட்டுக்கோப்பான கரங்களை அசைத்தபடியே, “அடேய் விகர்ணா, திரௌபதியால் தூண்டப்பட்ட பிறகும் இங்கிருக்கும் முக்கிய நபர்கள் எவரும் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவர்கள் அனைவரும், திரௌபதி சரியாக வெல்லப்பட்டதாகவே கருதுகிறார்கள். வயதில் முதிரா சிறுவனான நீ மட்டுமே கோபத்தில் வெடிக்கிறாய். முதியவன் போல சபையில் நின்று பேசாதே. நியாயமாக வெல்லப்பட்ட திரௌபதி வெல்லப்படவில்லை என்று மூடனைப் போல உளறுகிறாய். ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் கற்பற்ற பெண்ணே. பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், அவளும், பாண்டவர்கள் அனைவரும் சகுனியால் நியாயமாகவே வெல்லப்பட்டனர்” என்று சொல்லி விகர்ணனை அதட்டிவிட்டு, துச்சாசனனிடம், “ஏ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைவாயாக” என்று ஆணையிட்டான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், தங்கள் மேலாடைகளைக் களைந்தனர். அப்போது துச்சாசனன், அனைவர் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடையை வலுக்கட்டாயமாகப் பற்றி, அதைக் களையத் தொடங்கினான்.

திரௌபதியின் உடை இவ்வாறு களையப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஹரியின் நினைப்பால் திரௌபதி உரக்க ஓலமிட்டு அழுது, “ஹே கோவிந்தா, துவாரகையில் வசிப்பவனே, ஹே கிருஷ்ணா, இடையர் குலப் பெண்களை விரும்புபவனே, கேசவா, இந்தக் கௌரவர்கள் என்னை அவமானப்படுத்துவதை பார். ஹே பிரபுவே, லட்சுமியின் கணவனே, பிருந்தாவனத்தின் தலைவனே, அனைத்துத் துன்பங்களையும் அழிப்பவனே, ஹே ஜனார்த்தனா, இந்தக் கௌரவப் பெருங்கடலில் மூழ்கும் என்னைக் காப்பாற்றுவாயாக. ஹே கிருஷ்ணா, கிருஷ்ணா, மகாயோகியே, அண்டத்தின் ஆன்மாவே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவனே, ஹே கோவிந்தா, இந்தக் குருக்களின் மத்தியில் மானமிழந்து துன்பத்தில் நிற்கும் என்னைக் காப்பாற்று” என்று கதறி அழுதாள்.

துயரத்தில் இருந்த அந்த அழகிய திரௌபதி, தன் முகத்தை மூடி, மூவுலகத்தின் தலைவனும், ஹரியுமான கிருஷ்ணனை நினைத்து உரக்கக் கதறி அழுதாள். திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், மனம் கலங்கியவனாக, இரக்கமுள்ள இதயத்துடன் காற்றின் வேகத்தில் அங்கே வந்தான். விஷ்ணு என்றும், ஹரி என்றும் சிறப்பு வாய்ந்த அறத்தின் காப்பாளனான நரன் என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணனின் பெயரைச் சொல்லி திரௌபதி உரக்கக் கதறிக் கொண்டிருந்தபோது, அந்தக் கிருஷ்ணன் யாராலும் கவனிக்கப்படாமல் மறைவாக இருந்து, பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் அவளைப் போர்த்தினான்.

திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு, ஓர் ஆடை பறிக்கப்பட்ட போது, அதே வகையைச் சார்ந்த மற்றொரு ஆடை அவளை மறைப்பது போலத் தோன்றியது. இப்படியே பல துணிகள் காணப்படும் வரை இது தொடர்ந்து கொண்டு இருந்தது. பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான ஆடைகள் திரௌபதியின் மேனியில் இருந்து வந்து கொண்டே இருந்தன.

அந்தச் சபையில் இருந்த மன்னர்கள், உலகத்தின் காட்சிகளில் இயல்புக்கு மிக்க காட்சியைக் கண்டு, திரௌபதியைப் பாராட்டி, துச்சாசனைக் கண்டிக்கத் தொடங்கினர். துச்சாசனன் களைத்து விழுந்தான்.

இவ்வாறு கிருஷ்ணனைச் சரணாகதியாக அடைந்த திரௌபதி இம்மையில் காக்கப்பட்ட நிகழ்வு மஹாபாரதத்தில் வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. திரௌபதி தன் மானத்தைக் காத்துக் கொள்ள மார்பை மறைத்து ஆடைகளைப் பற்றியிருந்த வரையில் கிருஷ்ணன் வரவில்லை என்றும், தன் மீது கொண்ட நம்பிக்கை அனைத்தையும் துறந்து கிருஷ்ணனே கதியென அவள் தனது கரங்களை மேலே தூக்கி துதித்த பிறகுதான் கிருஷ்ணன் வந்தான் என்றும் வேறு சில புத்தகங்களில் காணப்படுகிறது. வியாச பாரதத்திலோ மேற்கண்டவாறே அவ்வரலாறு பதியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நிகழ்வு, பரமாத்மாவிடம் ஜீவன் கொள்ளும் சரணாகதியால் இம்மையில் விளையும் நன்மையை எடுத்துரைக்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்திருக்கிறது.

****

இது போலவே மற்றொரு சிறந்த உதாரணம்தான் பின்வருவதும். மஹாபாரதப் பெரும் போர் நேரப்போகிறதென கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் என்ற இரு தரப்பும் படைகளைத் திரட்டத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டு மன்னனின் ஆதரவை நாடிச் செல்கின்றனர். அவ்வகையிலேயே அர்ஜுனனும், துரியோதனனும் கிருஷ்ணனின் உதவியை நாடி துவாரகைக்குச் செல்கின்றனர். அந்நிகழ்வு மஹாபாரதத்தில் எவ்வாறு உரைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பின்வரும் வரிகளில் காண்போம்.

அர்ஜுனனும் துரியோதனனும் துவாரகையை அடைந்தனர். முதலில் துரியோதனன் சென்றான். கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்த துரியோதனன், கிருஷ்ணனுடைய படுக்கையின் தலைமாட்டில் இருந்த அழகிய இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அதன் பின்னர் அங்கே வந்த அர்ஜுனன், கரங்கள் கூப்பி, தலைவணங்கியபடி அந்தப் படுக்கை நுனியின் கால்மாட்டில் நின்றான். விருஷ்ணி வழித்தோன்றலான கிருஷ்ணன் விழித்த போது, முதலில் அர்ஜுனன் மீதே தனது கண்களைச் செலுத்தினான். பிறகே துரியோதனனைக் கண்டான். அந்த மதுசூதனன், அவர்களது பாதுகாப்பான பயணம் குறித்து விசாரித்து, முறையான வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களது வருகையின் நோக்கத்தைக் கேட்டான்.

அப்போது  துரியோதனன் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் கிருஷ்ணனிடம், “நடைபெறவிருக்கும் போரில் உன் உதவியை நீ எனக்கே அளிக்க வேண்டும். அர்ஜுனனும் நானும் உனக்குச் சமமான நண்பர்களே. மதுசூதனா, எங்கள் இருவருக்கும் நீ உறவினனே. ஆனால் இன்று, உன்னிடம் முதலில் வந்தது நானே. நல்ல மனம் கொண்டவர்கள், தங்களிடம் முதலில் வருபவரின் காரியத்தையே முதலில் எடுத்துக் கொள்வார்கள். இதுவே முன்னோரின் நடைமுறை. கிருஷ்ணா, அதே ஒழுக்கத்தையே நீயும் பின்பற்றுமாறு நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி அவனது உதவியை நாடினான்.

அதற்குக் கிருஷ்ணன், “துரியோதனா, நீயே முதலில் வந்தாய். இதில் ஐயமில்லை. ஆனால், இந்தத் தனஞ்சயனே என்னால் முதலில் பார்க்கப்பட்டான். முதலில் வருகை தந்த உன்னையும், முதலில் காணப்பட்ட அர்ஜுனனையும் நான் கருத்தில் கொள்வதால், நான் என் உதவியை உங்கள் இருவருக்கும் அளிப்பேன். ஆனால், வயதில் இளையோருக்கே முதல் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, தனஞ்சயனே, முதல் வாய்ப்பைப் பெறத் தகுந்தவன். போர்க்களத்தில் திறனுடன் போரிட வல்லவர்களும், பலத்தில் எனக்கு இணையானவர்களும், நாராயணர்கள் என்று அறியப்படுபவர்களும், எண்ணிக்கையில் பத்துக் கோடியாக இருப்பவர்களுமான கோபாலர்கள் நிரம்பிய பெரும் படை என்னிடம் இருக்கிறது. போரில் வெல்லப்பட முடியாத அப்படைவீரர்கள், உங்களில் ஒருவருக்கு அனுப்பப்படுவார்கள். போர்க்களத்தில் போரிடுவதில்லை என்ற தீர்மானத்துடன், ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு தனியாளாக இருக்கும் நான் மற்றொருவனிடம் செல்வேன். அர்ஜுனா, இவ்விரண்டில் உனக்கு வேண்டுமென எதை நீ வேண்டுகிறாய். விதிப்படி, முதல் வாய்ப்பைப்பெற நீயே தகுந்தவன்” என்றான்.

கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன், எதிரிகளைக் கொல்பவனும், க்ஷத்திரியர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரிலும் மேலானவனும், தன்விருப்பத்தின் பேரில் மனிதர்கள் மத்தியில் பிறந்தவனும், நாராயணனேயானவனும், படைக்கப்படாதவனும், போர்க்களத்தில் போரிடாதவனுமான அந்தக் கேசவனையே தேர்ந்தெடுத்தான்.

துரியோதனனோ நாராயணகோபாலர்கள் அடங்கிய அந்த முழுப் படையையும் தேர்ந்தெடுத்தான். ஆயிரமாயிரம் எண்ணிக்கையிலான அந்தத் துருப்புகளை அடைந்த துரியோதனன், தன் தரப்பில் கிருஷ்ணன் இல்லை என்பதை அறிந்தாலும், மிகவும் மகிழ்ந்தான். பயங்கரப் பராக்கிரமம் மிக்கப் படையை அடைந்த துரியோதனன், பெரும் பலமிக்க பலராமனிடம் சென்று, தனது வருகைக்கான நோக்கத்தை விளக்கினான்.

பலராமன், அந்தத் துரியோதனனிடம், “என்னால் ஒரு கணம் கூடக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. கிருஷ்ணனுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. யுதிஷ்டிரனுக்காகவோ, உனக்காகவோ நான் போரிடமாட்டேன். துரியோதனா, மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் பாரதக் குலத்தில் பிறந்த நீ, உனக்கு விதிக்கப்பட்ட விதிகளின் படி, போர்க்குல க்ஷத்திரிய அறத்தின் படி போரிடுவாயாக. செல்” என்றான் {பலராமன்}.

பிறகு அந்தத் துரியோதனன், கிருதவர்மனிடம் சென்றான். கிருதவர்மன் துரியோதனனுக்கு ஓர் அக்ஷௌஹிணி படைத் துருப்புகளைக் கொடுத்தான். தனது தரப்பில் கிருஷ்ணன் இல்லை என்பதை அறிந்தும், ஏற்கனவே அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்றே துரியோதனன் கருதினான்.

துரியோதனன் சென்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனிடம், “போரிடவே மாட்டேன் என்ற என்னை நீ தேர்ந்தெடுத்ததற்கான காரணம் யாது?” என்று கேட்டான்.

அதற்கு அர்ஜுனன், “அவர்கள் அனைவரையும் நீ கொல்வாய் என்பதில் எனக்குக் எள்ளவும் மாற்றுக் கருத்தே கிடையாது. கிருஷ்ணா, அவர்கள் அனைவரையும் நான் தனியனாகவே கொல்ல விரும்புகிறேன். நீயோ இந்த உலகின் ஒப்பற்ற மனிதனாவாய்; இந்தப் புகழ் உன்னைத் தொடர்ந்தே வரும். நீ எனக்குத் தேரோட்டியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எனவே, எனது நீண்ட நாள் விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும்” என்றான்.

அதற்கு, கிருஷ்ணன், “அர்ஜுனா, இஃது உனக்கு ஏற்றதாகவே இருக்கிறது. நான் உனது தேரோட்டியாகச் செயல்படுவேன்; உனது விருப்பம் நிறைவேறட்டும்” என்றான்.

அர்ஜுனன் கிருஷ்ணனைச் சரணாகதி அடைந்ததால், அவனே பெரும்போரின் நாயகனானான். கௌரவப்படையின் பெரும்பகுதியை அழித்ததில் அவனுடைய பங்கு பெரிது. பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டதால் இம்மையில் அடைந்த பலன்கள் ஏராளம்.

***

மேற்கண்ட இரு உதாரணங்களிலும் திரௌபதியும், அர்ஜுனனும் வேறெதிலும் பற்று கொள்ளாமல் கிருஷ்ணனையே சரணாகதி அடைந்தனர். தொடக்கத்தில் சொல்லப்பட்ட பகவத்கீதை 18:66 மொழியின் படியே கிருஷ்ணனே அவர்களைப் பாவத்தில் இருந்து விடுவித்து, அவர்களின் வருத்தங்களைப் போக்கினான்.

சராணகதியால் இம்மையில் கிட்டும் பலன்களை விளக்க மஹாபாரதத்தில் எண்ணற்ற கதைகள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக மேலும் சிலவற்றைப் பருந்து பார்வையாக சுருக்கமாகக் காண்போம். இவை நம் சிந்தைக்குத் தீனியாக அமையக்கூடும்.

1. ஆதிபர்வம் 3ம் அத்தியாயத்தில் சொல்லப்படும் சீடர்கள் கதை; சராணகதியால் அந்த மூன்று சீடர்களுக்கு விளைந்த நன்மையை எடுத்துரைக்கின்றன.

முதல் சீடன் ஆருணி குருவிடம் உள்ள அர்ப்பணிப்பில் அவரையே புகலிடமாகக் கொண்ட காரணத்தாலும், அவரது ஆணையை நிறைவேற்ற தன் உயிரையே பணயம் வைத்து வாய்க்காலில் படுத்துக் கிடந்து வெள்ளத்தை அடைத்ததால்  அவனுக்கு வேதங்களும், தர்மசாத்திரங்களும் அருளப்பட்டு, நற்பேறு கிட்டும் ஆசியும் வழங்கப்பட்டன. இரண்டாம் சீடன் உபமன்யு பசுகாத்தல் செய்து வரும்போது பசியால் தூண்டப்பட்டு எருக்கிலை உண்டு குருடாகிறான். அப்போது அவன் அஸ்வினி தேவர்களை அடைக்கலமடைந்து அவர்களைத் துதித்து மீண்டும் கண்களை அடைந்தான். மூன்றாம் சீடன் உதங்கன் குருவுக்குக் காணிக்கையளிக்க மன்னன் பௌசியனிடம் இருந்து அவனது மனைவியின் காது குண்டலங்களைப் பெற்று திரும்புகையில், தக்ஷகன் அவற்றை அபகரித்துச் செல்கிறான். அப்போது இந்திரனைப் புகலிடமாகக் கொண்ட உதங்கர் அவற்றை மீட்கிறார். அவர்களது குரு அயோதா தௌம்யர் அந்தச் சீடர்களால் பெருமையடைகிறார்.

2. ஆதிபர்வத்தின் தொடக்க அத்தியாயங்களில் (ஆதி பர்வம் 30ம் பகுதி) கருடனின் தாய் வினதை, பாம்புகளின் தாயான கத்ருவுக்கு அடிமையாகிறாள். அதன் காரணமாக கருடனும் அடிமையாகிறான். பாம்புகள் கருடனை ஒரு செயற்கரிய செயலைச் செய்ய ஏவுகின்றன. தங்களை அற்புதமான ஒரு தீவுக்கு சுமந்து செல்லும்படி அவனைப் பணிக்கின்றன. அப்போது அந்தப் பாம்புகளைத் தன் முதுகில் சுமந்து சென்ற கருடன் உயர உயரப் பறந்து சூரியனின் வெப்பத்தில் பாம்புகளை கருகச் செய்ய நினைக்கிறான். அப்போது பாம்புகள் இந்திரனிடம் அடைக்கலம் புகுந்து அவனைத் துதிக்கின்றன. அந்தத் துதியால் மகிழ்ந்து இந்திரன் மழையைப் பொழிகிறான். பாம்புகள் காப்பாற்றப்படுகின்றன.

3. தேவகுருவின் மகன், அசுர குரு சுக்கிராச்சாரியரைப் புகலிடமாக அடைந்து, அவரால் தன் உயிரையும், தேவர்களைக் காக்கும் சஞ்சீவி மந்திரத்தையும் அடைவது ஆதிபர்வம் 76ம் அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.

4. பூரு தன் தந்தை யயாதியிடம் கொள்ளும் சரணாகதியால் அவன் பெரும் நாட்டை அடைந்து அஃதை அறம் சார்ந்து ஆள்கிறான்.

5. ஆயுதப் பயிற்சியைப் புகலிடமாகக் கொண்ட அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை அடைவது ஆதிபர்வம் 135ம் அத்தியாயத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

6. விருந்தோம்பலைத் தங்கள் தர்மமாகக் கொண்ட ஒரு அந்தணர் குடும்பம் பகன் என்ற ராட்சசனிடம் பீமனால் காப்பாற்றப்படுகிறது. இஃது ஆதிபர்வம் 166ம் பகுதியில் சொல்லப்படுகிறது.

7. பரசுராமரைப் புகலிடமாக அடைந்து ஆயுதங்களைப் பெற்ற துரோணரின் கதை ஆதிபர்வம் 168ல் சொல்லப்படுகிறது.

8. யாஜர் மற்றும் உபயாஜர் ஆகியோரைப் புகலிடமாகக் கொண்டு துருபதன் திருஷ்டத்யும்னனையும், திரௌபதியையும் பெறுவது ஆதிபர்வம் 169ல் சொல்லப்படுகிறது.

9. அர்ஜுனனைப் புகலிடமாக அடைந்த அசுரத்தச்சன் மயனின் உயிர் காப்பாற்றப்படுவது ஆதிபர்வம் 230ல் சொல்லப்படுகிறது.

10. மந்தபாலர் என்ற முனிவர் பறவையாகி பெற்ற குஞ்சுகள் அக்னியைத் தஞ்சமாக அடைந்து உயிர் காப்பாற்றப்படுவது ஆதிபர்வம் 234ல் சொல்லப்படுகிறது.

11. கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்ட பாண்டவர்கள் செய்த சாகசங்கள் சபாபர்வம் முழுவதும் சொல்லப்படுகின்றன. அவர்கள் தங்கள் புதிய தலைநகரில் பெரும் மாளிகையை எழுப்புகின்றனர், அர்ஜுனன் பெரும் ஆயுதங்களை அடைகிறான், பாண்டவர்கள் ஜராசந்தனை வெல்கிறார்கள்; திக்விஜயம் செய்து பல நாடுகளை வெல்கிறார்கள்; மன்னர்கள் இம்மையில் அடையும் உச்சநிலையான ராஜசூய வேள்வியை அவர்கள் செய்கிறார்கள். இவை அனைத்தும் பாண்டவர்களுக்குக் கிருஷ்ணனாலேயே கிட்டுகின்றன.

12. வனபர்வம் முழுவதும் பாண்டவர்கள் பெரும் முனிவர்களை அடைக்கலமாக அடைந்து பெரும் ஞானத்தை அடைகின்றனர். யுதிஷ்டிரன் பகடை ஞானத்தை அடைகிறான்; அர்ஜுனன் கடுந்தவம் இருந்து பாசுபதம் அடைகிறான். ஒரு கசாப்புக் கடைக்காரனைத் தஞ்சமடைந்து ஞானம் பெற்ற கௌசிகர் என்ற அந்தணரின் கதை வனபர்வம் 209ல் சொல்லப்படுகிறது.

13. கணவனைத் தஞ்சமாகக் கொள்வதே பதிவிரதைகளுக்குச் சிறப்பு என்பதை சத்தியபாமாவுக்கு திரௌபதி சொல்கிறாள். இது வனபர்வம் 231ல் சொல்லப்படுகிறது.

14. கிருஷ்ணனைத் தஞ்சமாக அடைந்த பாண்டவர்கள் துர்வாசரின் சாபத்தில் இருந்து தப்புவது வனபர்வம் 261ல் சொல்லப்படுகிறது.

15. கணவனையே புகலிடமாகக் கொண்ட சாவித்ரியின் பெரும்சாதனை வனபர்வம் 295ல் சொல்லப்படுகிறது.

16. அறத்தையே புகலிடமாகக் கொண்ட யுதிஷ்டிரனின் மகிமை வனபர்வம் 312ல் சொல்லப்படுகிறது.

17. தலைமறைவாக வாழவேண்டி காலத்தைக் கடக்க பாண்டவர்கள் துர்க்கையம்மனை சரணடைவது விராடபர்வம் 6ம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.

18. உத்தியோக பர்வம் முழுவதும் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்த பாண்டவர்கள் எவ்வாறு படைகளைத் திரட்டினர் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனையே தாங்கள் சரணாகதியாகக் கொண்டவர் என்பதைப் பாண்டவர்கள் இந்தப் பர்வத்தில் வலுவாகப் பதிவு செய்கின்றனர்.

19. பீமன் கிருஷ்ணனிடம் கொண்ட அர்ப்பணிப்பை உத்யோக பர்வம் பகுதி 74ல் காணலாம்.

20. பீஷ்ம பர்வத்தில் வரும் பகவத்கீதையில் சரணாகதியின் மகத்துவம் விரிவாக விளக்கப்படுகிறது.

21. பீஷ்ம பர்வம் முதல் ஸ்திரீ பர்வம் வரை கிருஷ்ணனின் மூலம் பாண்டவர்கள் அடைந்த நன்மைகள் விரவிக் கிடக்கின்றன. அந்தந்தப் பர்வங்களின் நாயகர்கள் கிருஷ்ணனிடம் கொண்ட பக்தியையும் எடுத்துரைக்கின்றன.

22. சாந்தி பர்வத்தில் கிருஷ்ணனின் தூண்டலின் பேரிலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ராஜநீதிகளின் போதனையைப் பெறுகிறான்.

இன்னும் அனுசாசன பர்வம் முதல் ஸ்வர்க்கரோஹண பர்வம் வரை பல கதைகள் உண்டு.

இம்மையில் அடையும் பலன்களைவிட ஆத்மாவுக்கு பேரின்பம் நல்குவது மறுமையில் விளையும் கதியே ஆகும். மஹாபாரதத்தின் பனிரெண்டாம் பர்வமான சாந்தி பர்வத்தில் வரும் மோக்ஷதர்ம உபபர்வம் முழுவதும் ஜீவாத்மாவானவன், பராமாத்மாவிடம் சரண்புகும் வழிமுறைகளையும் அதன்கதியாக விளையும் பிரம்மம், அல்லது பரமாத்ம நிலையில் கலப்பதையும் கற்பிப்பதாகவே அமைந்திருக்கிறது. இது சரணாகதியால் மறுமையில் விளையும் பயன். இதை விளக்க உடல் மற்றும் ஆன்ம நிலை தத்துவங்களும், பயிற்சிகளும், சாங்கியம், யோகம், வைசேஷிகம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளும் சொல்லப்படுகின்றன. சாந்தி பர்வ மோக்ஷதர்மம் உபபர்வம் முழுவதும் சரணாகதியின் அறிவியல் என்றே சொல்லப்படுகிறது.

கிருஷ்ணனிடம் கொள்ளும் சரணாகதி குறித்து பாகவதத்தில் இன்னும் விரிவாக ஆழமாகப் பேசப்படுகிறது.

மேற்கண்ட அத்தியாயங்கள் அனைத்தையும் https://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html என்ற சுட்டியில் விரிவாகக் காணலாம்.

***

இதே மலரில், ஜடாயு அவர்கள் எழுதிய “இராமாயணத்தில் சரணாகதி” என்ற கட்டுரை பின்வரும் சுட்டியில் இருக்கிறது : http://www.tamilhindu.com/2019/02/ராமாயணத்தில்-சரணாகதி/

சம்போகம்

ஞமலிகள் சாலையில் கலவியில் ஈடுபட்டால், கல்லெடுத்து அடிப்போருமுண்டு, அவற்றுக்கு இடையூறின்றிக் கடந்து செல்வோருமுண்டு. அவற்றின் இருப்பே சாலைகளில் கூடாது என்று எண்ணி புகாரளிப்போரால் வண்டிகளில் ஏற்றிச் சென்று கொல்லும் ஆட்சிமன்றங்கள் என்றும் உண்டு. ஆனால், சாலைகளில் கலவியில் ஈடுபடும் ஞமலிகளுக்கு ஆட்சிமன்றம் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று கேட்கும் போலிப் பகுத்தறிவின் குரலுக்கு என்ன பதிலளிப்பது?

கலவி இயல்பானதே, புனிதமானதே. அவ்வாறிருக்கையில், அதற்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றதென்றால் ஏதோ இயல்பற்றது நடக்கிறதென்ற பொருளையே தரும். கலவியில் இயல்பானதும், அல்லாததும், முறையானதும், முறையற்றதுமென எவ்வாறு வகைப்படுத்தலாம்?

முகம் நோக்கி நெஞ்சங்கலந்த கலவியானது, மனிதன் மற்றும் சிலந்தி வகைகளைத் தவிர வேறு விலங்கினமெதனிலும் கிடையாது. ஒரு சில தருணங்ளில் மட்டும் ஓரங்கட்டன்களில் நேர்வதுண்டு. நெஞ்சும்முதுகுங்கலந்த கலவியே பெரும்பாலான உயிரினங்களில் நேர்கிறது. தற்கலவியில் சந்ததியைப் பெருக்கும் இருபாலுறுப்புகள் கொண்ட சில புழுக்களும் உண்டு எனக் கேள்விப்படுகிறோம். ஆனால் தற்பாலினக் கலவி எந்த விலங்கினத்திலும் காணப்படுவதில்லை.

சிற்றின்பம் தேடும் வேட்கையை மட்டுமே கொண்ட உற்பத்தி தவிர்த்த கலவி மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்தின் இயல்பிலும் காணப்படவில்லை. உற்பத்தி தவிர்த்த எதிர் பால் கலவியே வெறும் வேட்கை மட்டும்தான் என்றால், தற்பாலினக் கலவி, இருபாலுறவு, விலங்கினக்கலவி ஆகியவற்றை என்னவென்று சொல்வது?

கோவில் கோபுரங்களில் உகவர், மாயிழை, இருபாலி, விலங்கினக் கலவிகளுமுண்டு என்று அந்நடத்தைகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். அறச் செயல்கள் மற்றும் அறவோருடன் சேர்த்து, பாவச்செயல்களுக்கும், பாவிகளுக்கும் கூடக் கோபுரங்களில் இடமுண்டு. எனவே, அவற்றைச் சாத்திரமேற்கிறதென்றோ, கோவில் ஏற்கிறதென்றோ கொள்ள முடியாது. அவை அவற்றின் இருப்பை ஏற்றுக் கொள்ளக்கூடுமேயன்றி, மனிதர்கள் பின்பற்றக்கூடிய ஒழுக்கமாக அவற்றை ஒருபோதும் ஏற்காது.

இதுபோன்ற காரியங்களில் இயல்பென்றும், அல்லவென்றும் முடிவெடுப்பது யார்? அம்முடிவையும் எதனடிப்படையில் எடுக்க முடியும்?

சம்பந்தப்பட்ட பிறழ்புணர்தரப்புகளே இவற்றை இயற்கைக்கு மாறான, முறையற்ற கலவி என்று நூறு சதம் நம்பினாலும், நம் போலிப்பகுத்தறிவாளிகளால் நம்பமுடியாது. அஃது அவர்களின் இயல்பு.

எனினும், இயற்கையாகவே அலியாகவும், பேடாகவும் பிறக்கும் மனிதர்களுக்குச் சட்டத்தின் மூலம் இந்தச் சமூகத்தால் என்ன நீதியைச் செய்துவிட முடியும்?

எவரையும் துன்புறுத்தாமல், உடன்பாட்டுடன், தனிமையில் தங்களுக்குள் மட்டுமே நேர்கையில் இவற்றைத் தண்டனைக்குரிய செயல்களாகக் கருத முடியாது என்றாலும், சட்டம் போட்டு இவற்றுக்கு அங்கீகாரம் கொடுப்பதும், ஆதரவளிப்பதும் ஒருபோதும் தகாது.

மனிதர்களின் தனிப்பட்ட கலவிக் காரியங்களில் சம்பந்தப்பட்டவர்களின் அகக்குரலன்றி, நீதிமன்றங்களின் புறக்குரல் தலையிடத் துணிவது நிச்சயம் அறமல்ல. இஃது அரக்கத்தனம்.

அடையாள அரசியல்!

நாடு, இனம், மதம், மொழி, சாதி ஆகிய அடையாளங்களைக் கடந்த மனிதர்களாகவே நாம் இருக்க வேண்டும் என்று சொல்லும் பகுத்தறிவுவாதிகள், தங்களுக்கு வசதிப்படும் நேரங்களில் மட்டும் தங்களுக்குப் பிடித்த அடையாளங்களுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

கம்யூனிஸ்ட், திராவிடன், சிறுபான்மையினத்தவன், நாத்திகன், தமிழன், கன்னடன், பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்ற நிலைகள் இவர்களுக்கு அடையாளங்களில் அடங்காதவை. அடையாளச் சிக்கலில் சிக்கி சீரழியும் இந்தப் போலிகள், தேசியவாதிகளின் அடையாள அரசியலைக் குற்றஞ்சாட்டுவது முரண்தொகையல்லாமல் வேறென்ன?

இருண்ட கண்டமாகத் தெரிய வேண்டும் என்று நாம் உயர்த்திய கொடிகளைப் போலவே, நமது உண்மை அடையாளம், மடமை / அறியாமை எனும் இருள்நிலையே.

அஸதோமா சத்கமய
தமஸோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

உண்மையற்ற நிலையிலிருந்து உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிருந்து அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அமைதி நிலைக்கட்டும்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,
காலவெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,
பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!